இந்தப் போராட்டம் தற்போதைக்கு வெற்றி பெறலாம் அல்லது ஒடுக்கப்படலாம். ஆனால் போராட்டத்துக்கான காரணங்கள் இருக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மாநிலத்திலும் இப்படியான போராட்டங்கள் வெடிக்கலாம்
அவர்கள்
பின்னால் நடிகர்கள் இல்லை; அரசியல் கட்சிகள் இல்லை; ஊடகங்களும் பெரிய
அளவில் இல்லை; ஆனால் அவர்களின் முழக்கங்கள் தமிழ்நாடு முழுக்க ஒரே குரலாக
எதிரொலிக்கிறது. இது எப்படி சாத்தியமானது? மெரினாவில் போராடிய இளைஞர்களைக்
கலைப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
எங்கும் இருள் சூழ்ந்த போது அவர்களின் செல்போன்களின் ‘பிளாஷ் லைட்கள்’
ஒளிரத் தொடங்கின. தங்கள் செய்தியை அதின் மூலம் அவர்கள் தெளிவாகச்
சொன்னார்கள்: ‘எங்களுக்கு யாரும் தேவையில்லை; எங்கள் கையில் இருக்கும்
செல்போன்கள் போதும்’
எகிப்தில்
நடந்ததைப் போன்று இது சமூக வலைத்தளங்களின் வழியாய்த் தீயெனப் பரவிப்
படர்ந்த புரட்சி. ஒரு வாரத்துக்கு முன்னர் வரை இப்படி ஒரு பெரும்
போராட்டத்தை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
கடந்த ஆண்டுகளைப் போன்றே பொங்கலை ஒட்டிய நாட்களில் நடக்கும் சிற்சில ஆர்ப்பாட்டங்களுடன் முடிந்துவிடும் என்றுதான் நினைக்கப்பட்டது. ஆனால் தமிழ் இளைஞர்கள் இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டுகளைப் போன்றே பொங்கலை ஒட்டிய நாட்களில் நடக்கும் சிற்சில ஆர்ப்பாட்டங்களுடன் முடிந்துவிடும் என்றுதான் நினைக்கப்பட்டது. ஆனால் தமிழ் இளைஞர்கள் இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்.
தமிழர்களின்
பாரம்பரிய விளையாட்டு அல்லது பண்பாட்டை மீட்டெடுக்கும் போராட்டமாக இது
அடையாளப்படுத்தப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்கும் திரளான இளைஞர்கள்
குறிப்பாக மாணவர்களும் அதை அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்போராட்டங்களின் உள்ளீடு மேலும் சில நுண்மையான கூறுகளைக்
கொண்டிருக்கிறது. வழக்கமாக இது போன்ற தருணங்களில் உள் நுழைந்து ஆதாயம்
தேடும் ஓட்டுக் கட்சிகள் இப்போராட்டத்தில் சற்று தள்ளியே நிற்பதில் அந்த
நுண்ணரசியல் தெரிகிறது.
இந்தப்
போராட்டத்தில் ஜல்லிக்கட்டு என்பது இலக்கு அல்ல் ஆயுதம். மொழியை
ஆயுதமாக்கிப் போராடிய தங்கள் முன்னோர்களின் வழியில் இன்று பண்பாட்டு
ஆயுதமேந்திப் போராடுகிறார்கள் தமிழ் இளைஞர்கள். அவர்கள் ஜீன்ஸ்
அணிந்திருக்கிறார்கள்; வெளிநாட்டு கருப்புக் கண்ணாடிகளும், ஆடைகளும்
அணிந்திருக்கிறார்கள். ஆனாலும் தங்களைச் சூறையாடும் பன்னாட்டு
நிறுவனங்களின் மீது அவர்களுக்குக் கோபம் இருக்கிறது. அந்தக் கோபங்கள்
போராட்டமாக மாறி வெளிப்பட ஒரு குவிமையம் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது.
அதைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் ஜல்லிக்கட்டில் அதைக்
கண்டடைந்திருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டை
எதிர்ப்பதில் கலப்பினப் பசுக்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, நாட்டு
மாடுகளை அழிக்கும் கார்ப்பரேட் அரசியலை அவர்கள் சமூக வலைத்தளங்களில்
தொடர்ச்சியாகப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். தாங்கள் குளித்த நதிகளை
உறிஞ்சுக் குடிக்கும் குளிர்பான நிறுவனங்கள், அண்ணாந்து பார்த்த மலைகளைத்
தின்று செரிக்கும் குவாரி நிறுவனங்கள், தாவி விளையாடிய ஆற்று மணலைக்
கொள்ளையடித்துச் செல்லும் பெரு நிறுவனங்கள் என எல்லாவற்றின் மீதான கோபத்தை
வெளிப்படுத்த அவர்களுக்குக் கையில் கிடைத்துள்ள ஆயுதம் ஜல்லிக்கட்டு.
உண்மையில்
இப்போராட்டம் பண்பாட்டுக்கான போராட்டம் அல்ல, கற்பனைக்கு எட்டாத வகையில்
பெருகிப் போயுள்ள பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம். இந்த
நுண்மையைக் கண்டுணர்ந்து இப்போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து களம்
கண்டிருக்க வேண்டியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள். ஆனால் அவர்களும் இதனை
வெறும் பண்பாட்டுப் போராட்டமாகக் கருதி தள்ளியே நிற்கிறார்கள். என்ன
செய்வது? காம்ரேடுகளுக்குப் பண்பாடு என்பது எப்போதும் கெட்ட வார்த்தைதான்.
ஜல்லிக்கட்டு
நடத்துவது தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டோ அல்லது
நிறைவேற்றப்படாமலோ கூட இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.
ஆனால் இப்போராட்டத்தின் வழியாக இளைஞர்களிடம் விதைக்கப்பட்டுள்ள பன்னாட்டு
முதலாளியத்துக்கு எதிரான உணர்வு அத்தனை சீக்கிரம் வடிந்துவிடப் போவதில்லை.
காவிரி
டெல்டா விவசாயிகளின் தொடர் தற்கொலைகளால் தமிழ் நிலத்தின் வேளாண் சமூகம்
பெரும் நிலைகுலைவைச் சந்தித்துள்ளது. இன்னமும் இங்கு பெரும்பான்மை மக்களின்
தொழில் விவசாயம்தான். கடந்த நூறாண்டுகளில் இல்லாத பெரும் வறட்சி தமிழகத்தை
நெருங்கி வருகிறது. அதன் வெக்கை தமிழ் மக்களின் மனங்களில் இப்போதே
அனலடிக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமின்றி இங்குள்ள ஆறுகளின்
பிறப்பிடங்களான அண்டை மாநிலங்களிலும் வழக்கமான மழைப்பொழிவு இன்றி கடும்
வறட்சி நிலவுகிறது. நதிகளும் மற்ற நீர்நிலைகளும் காய்ந்து கிடக்கின்றன.
விவசாயம்
சாராத மக்களையும் இந்த வறட்சி அச்சுறுத்துகிறது. வரலாற்றில் இல்லாத பெரும்
தண்ணீர்ப் பற்றாக்குறை தமிழகத்தை நெருங்குகிறது. பெரும் நிறுவனங்களும்,
தண்ணீர் வியாபாரிகளும் பிளந்து கிடக்கும் நிலங்களைத் துளைத்து ஆழச்சென்று
நீரை உறிஞ்சுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நுழைவதற்கு முன்னர்
வரை இப்படியான சுரண்டல்களும், நீர்வளச் சூறையாடல்களும் இருந்ததில்லை
என்பதைத் தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். அடி வரை
சுரண்டப்பட்ட இளைஞர்கள் ‘கொக்ககோலா’ பாட்டில்களை உடைக்கிறார்கள்.
தங்கள்
உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்தவும் முன்னெப்போதும் இல்லாத
வாய்ப்புகள் அவர்கள் முன்னால் குவிந்து கிடக்கின்றன. சமூக வலைத் தளங்களில்
எல்லோருமே கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலைப் பேசுகிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பொதுவுடைமைவாதிகளின் அரசியல் கட்டுரைகளில்
(மட்டுமே) வெளிப்பட்ட கருத்தியல்கள் இன்று ‘வாட்சப்’ மற்றும் பேஸ்புக்கில்
எளிய ‘மீம்ஸ்களாக’ வலம் வருகின்றன. இத்தனை நாளாய் கள்ள மவுனம் சாதித்த
வெகுசன ஊடகங்களும் இன்று அவற்றைப் பேச வேண்டிய சூழலுக்குத்
தள்ளப்பட்டுள்ளன. கொக்க கோலாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த
நடிகர்கள் விவசாயத்துக்கு எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலைப்
பேசியதைப் போல.
இணையப் பெருக்கம்
மற்றும் ‘ஸ்மார்ட் போன்’ எனப்படும் திறன் பேசிகளின் வருகை, சமூக
வலைத்தளங்களின் பரவல் ஆகியவை இதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. படித்த
இளைஞர்ககளின் கோபமும் எதிர்ப்புணர்வும் தணிக்கையின்றி வெளிப்படவும் பரவவும்
இந்தச் சமூக வலைத்தளங்கள் களத்தை ஏற்படுத்தித் தருகின்றன. இன்று யாரும்
தங்களுடைய பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்ல மீடியா அலுவலகங்களின்
வாசலில் காத்துக் கிடப்பதில்லை; நிருபர்களை அழைப்பதில்லை. தங்கள் தார்மீகக்
கோபங்களை கைபேசிகளின் வழியாகப் பரப்புகிறார்கள்.
தனித்தனியான
இந்தக் கோபங்கள், அவற்றுக்கான காரணங்களைத் தேடியலைந்தபோது மெல்ல மெல்லக்
குவிந்து இயல்பாக கார்ப்பரேட் அரசியலைக் குறிவைத்து நின்றன.
பெருநிறுவனங்களின் லாப நோக்கிற்கு ஏற்ப இந்தியச் சந்தையைத் தயார் செய்து
கொடுத்த முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய மோடி அரசின் மீதான
கொந்தளிப்பாக அந்தக் கோபம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு கொண்டு
வந்த பண மதிப்பு நீக்கத்தினால் உண்டான பாதிப்பு கார்ப்பரேட் அரசியலை
மக்களிடம் சரியாக அடையாளம் காட்டியது. மரச்செக்கு எண்ணெய், நாட்டுச்
சர்க்கரை என்று வட்டார வணிகத்தின் நுகர்வோர்களாக மாறிக் கொண்டிருந்தவர்களை
சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கித் துரத்தினார் மோடி.
இந்தியத்
தேசியத்துக்கு எதிரான தமிழ்த் தேசிய உணர்வுகளாகவும் தமிழக இளைஞர்களிடம்
வெளிப்பட்டது இந்தக் கோபம்தான். புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு முன்னால்
இருந்த தமிழ்ச் சமூகச் சூழலை ஓர் அழகிய கனாக்காலமாக அவர்கள் பேஸ்புக்கில்
கொண்டாடுகிறார்கள். தமிழ்ச் சூழலை உருக்குலைத்தது பன்னாட்டு நிறுவனங்களின்
வருகை. அமெரிக்க பீட்டாவுக்கு எதிரான வெறுப்பும் அதன் அடையாளம்தான்.
சொல்லப்போனால் இப்போது போராடும் இளைஞர்களில் பெரும்பான்மையானோர் அந்தக்
கனாக்காலத்தில் பிரக்ஞைப்பூர்வமாக வாழ்ந்தவர்கள் இல்லை. ஆனாலும் அது
அவர்கள் மனதில் கனவாகவும் கழிவிரக்கமாகவும் படிந்திருக்கிறது.
கார்ப்பரேட்டுகளின்
நலன்களுக்காக தங்களுடைய பாரம்பரியங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும்
இழப்பது அவர்களை வெறுப்படையச் செய்கிறது. அதற்கு மத்திய, மாநில அரசுகளும்,
நீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளும் உடந்தையாயிருப்பது அவர்களைக்
கோபப்படுத்துகிறது. எனவே இந்த ஒட்டுமொத்த அமைப்புக்கும் சூழலுக்கும் எதிராக
அவர்கள் அடையாள மீட்பைக் கோருகிறார்கள். ஜல்லிக்கட்டை ஆயுதமாகக்
கையிலெடுக்கிறார்கள்.
இந்தியா முழுக்க
உருப்பெற்றிருக்க வேண்டிய இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு முந்திக்கொண்டு
நிற்பதில் தமிழனாகப் பெருமை கொள்ள முடிகிறது. இந்தப் போராட்டம் தற்போதைக்கு
வெற்றி பெறலாம் அல்லது ஒடுக்கப்படலாம். ஆனால் போராட்டத்துக்கான காரணங்கள்
இருக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும்
மாநிலத்திலும் இப்படியான போராட்டங்கள் வெடிக்கலாம். ஜல்லிக்கட்டு போல்
அவர்களுக்கும் ஏதாவதொரு பண்பாட்டு ஆயுதம் கிடைக்காமலா போய்விடும்?
- கணேஷ் எபி கீற்று.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக