வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு .. பெங்களூர் அதிர்ந்தது இப்படித்தான் .. களத்தில் இருந்து நேரடி விபரம்!

.nisaptham.com:  பெங்களூரில் இவ்வளவு கூட்டம் சேருமென்று எதிர்பார்க்கவில்லை. நேற்றிலிருந்தே வாட்ஸப் குழுமங்களில் பரவலாக பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று மாலையில் ஒரு செய்தி வந்தது- வியாழன் மாலை 4 மணிக்கு டவுன்ஹாலில் திரண்டு விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. அந்திவேளையில் சில இளைஞர்களிடம் பேசிய போது அனுமதியளிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் இரவில்தான் கடிதம் கைக்கு வரும் என்றார்கள். ஆனால் இரவு வரைக்கும் கிடைக்கவில்லை. இரவு பத்து மணிக்கு மேலாகத்தான் அனுமதியில்லை என்ற தகவல் வந்தது.& இந்த உரையாடல் அத்தனையும் வாட்ஸப் குழுமங்களில்தான் நடைபெற்றது.& பெங்களூரில் அனுமதியில்லாமல் கூட்டம் நடத்துவது லேசுப்பட்ட காரியமில்லை. வேறு மாநிலம். இப்பொழுதுதான் பிரச்சினைகள் உண்டாகின. ஆனாலும் இளைஞர்கள் உறுதியாகத்தான் இருந்தார்கள். ‘யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் போறேன்’ என்று பிலால் என்கிற இளைஞர் செய்தி அனுப்பியிருந்தார். அவரை நேரில் எல்லாம் பார்த்ததில்லை. குழுமத்தின் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். அவரைப் போலவே இன்னமும் பல இளைஞர்கள்.

ஃபேஸ்புக்கில் கூட இன்று காலையில் ‘பெங்களூரில் போராட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை’ என்று எழுதியிருந்தேன். ஆனால் சேர்கிற கூட்டத்தை நாமாகக் கலைத்துவிடக் கூடாது என்று நீக்கிவிட்டேன். என்னிடம் மட்டுமே நாற்பது ஐம்பது பேராவது ‘போராட்டம் நடக்கிறதா?’ என்று கேட்டிருப்பார்கள். கேட்டவர்களிடமெல்லாம் அனுமதி கிடைக்கவில்லை என்று மட்டும் பதில் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அப்பொழுதே தெரியும் எப்படியும் கன கூட்டம் சேர்ந்துவிடும் என்று. அப்படித்தான் ஆகிப் போனது.
குழுமத்தில் யாரோ ஒரு நண்பர் ‘அண்ணா வெறும் இருபது பேர்தான் இருக்காங்க’ என்று நான்கரை மணிக்கு செய்தி அனுப்பியிருந்தார். பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றேன். வழியில் ஒரு பைக்காரரிடம் ‘டவுன்ஹால் எல்லி இதியே குரு?’ என்ற போது அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ‘ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கா? என்னை ஃபாலோ பண்ணுங்க’ என்றார். போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. நெருங்க நெருங்க தமிழில் பேசிக் கொள்கிறவர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. டவுன்ஹாலைச் சுற்றி கூட்டம் நிரம்பி வழிந்தது. பல நூறு இளைஞர்கள் கூடியிருந்தார்கள். இளைஞிகளும்தான். கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் ஐடிக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். யாரையும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் ஒன்றிணைந்தார்கள்.
‘வீ வாண்ட் ஜல்லிக்கட்டு’
‘தடைசெய் தடைசெய் பீட்டாவை தடை செய்’
‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’
‘கட்டு கட்டு ஜல்லிக்கட்டு; காட்டு காட்டு தமிழன் கெத்தைக் காட்டு’ என்று தொண்டை கிழிய கத்தினார்கள். டவுன்ஹால் பகுதியே அதிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு கூட்டம் கூடுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. போலீஸ்காரர்களே கூட ஆச்சரியப்பட்டார்கள். இளைஞர்கள் மடித்து வைத்திருந்த பதாகைகளைக் காட்டினார்கள். வெகு உற்சாகத்துடன் குரல் எழுப்பினார்கள். அனுமதி இல்லை என்கிற நிலைமையில்தான் இவை அத்தனையும் நடைபெற்றது. இன்று பெங்களூரில் அனுமதியில்லை என்ற காரணத்தினால் எனக்குத் தெரிந்தே பலர் ஓசூர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். ஒருவேளை அனுமதி கிடைத்திருந்து அத்தனை பேருக்கும் சரியான தகவல் சென்றிருந்தால் ஸ்தம்பித்திருக்கக் கூடும்.
தமிழனுக்கு தமிழன் உதவ மாட்டான் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தான் நினைத்துக் கொண்டும் இருந்தேன். இவ்வளவு உத்வேகமும் உணர்வும் இத்தனை நாட்களாக எங்கே ஒளிந்திருந்தது? மிகைப்படுத்திச் சொல்லவில்லை. உடல் சிலிர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இளைஞர்களின் உற்சாகத்திலும் ஆர்வத்திலும் அப்படித்தான் தோன்றியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகவே ஐந்தரை மணி வாக்கில் காவலர்கள் கலையச் சொன்னார்கள். மிரட்டவெல்லாம் இல்லை. நாகரிகமாகச் சொன்னார்கள். மறுபடியும் ஞாயிற்றுக்கிழமையன்று பனிரெண்டு மணிக்கு இதே இடத்தில் கூடுவோம் என்று சொல்லிவிட்டு இளைஞர்கள் கிளம்பினார்கள். அநேகமாக ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டுமொருமுறை அதிரக் கூடும்.
இந்தப் போராட்டங்களை ஊடகங்கள் பதிவு செய்திருக்குமா; கூட்டத்தில் யார் தலைவன் என்றெல்லாம் எந்தச் சந்தேகமும் யாருக்கும் இல்லை. எதைப்பற்றியும் யாரும் கவலையும்படவில்லை. தமிழனுக்காக குரல் கொடுக்கிறோம் என்பது மட்டும்தான் அத்தனை பேரின் மனதிலும் இருந்திருக்க வேண்டும். அவரவர் வேலையைவிட்டுவிட்டு சாலையில் இறங்கியிருந்தார்கள். பெங்களூரின் மையப்பகுதியைத் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டார்கள்.
கத்தியதில் தொண்டை வலிக்கிறது. வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. ஜல்லிக்கட்டுவுக்கான போராட்டத்திற்கு வந்திருக்கிறேன் என்றேன். நம்பவேயில்லை. இரண்டு மூன்று நிழற்படங்களை எடுத்துக் கொண்டேன். வரலாறு முக்கியமில்லையா அமைச்சரே?< பெங்களூரு தமிழர்கள் என்றால் ஜீன்ஸ் பேண்ட்டும் டீஷர்ட்டுமாக கம்யூட்டரைத் தட்டிக் கொண்டு, சினிமா படத்துக்கு ஆன்லைனில் புக் செய்து, ரெட்பஸ்ஸில் ஊருக்குச் சென்று வந்தபடி தம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் சுரணையே இல்லாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பவர்கள் என்று நினைத்தீர்களா? பெங்களூருடா என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது.

உண்மையிலேயே இந்த மாலை அற்புதமானது. ஒருங்கிணைத்த அத்தனை இளைஞர்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கம். சாதி, மதம், அரசியல் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் தமிழன் என்ற இன உணர்வு சார்ந்த இந்த நெருப்பை மட்டும் அணையாமல் வைத்துக் கொள்வோம். அதுதான் காலத்தின் தேவை! 

கருத்துகள் இல்லை: