செவ்வாய், 17 ஜனவரி, 2017

ராணுவ வீரர்களின் உணவில் மோசடி ! நீதிமன்றம் நோட்டீஸ்!


மின்னம்பலம் : எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பதூர் யாதவ் என்பவர் செல்பேசி மூலம் தான் பேசிய 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தினமும் குளிரில் 11 மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டே வேலை பார்க்கும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச் செல்கிறோம். எங்களுக்கு அரசு தேவையான உணவு பொருட்களை அனுப்பினாலும், உயர் அதிகாரிகள் அதை சட்ட விரோதமாக விற்பனை செய்து பணமாக்கிக்கொள்கிறார்கள் என அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகப்பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, தேஜ் பதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர், மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என்றும் குடிகாரர் எனவும் பாதுகாப்பு படை கருத்து தெரிவித்தது.

அதற்கு பதிலளித்த அவரது மனைவி ஷர்மிளா: மனநலம் பாதிக்கப்பட்டவரை எப்படி பாதுகாப்பு பணிக்கு எல்லைக்கு அனுப்பி வைத்தீர்கள்? உயர் அதிகாரிகளின் ஊழலை வெளிக்கொண்டு வந்த தனது கணவரை திங்கட்கிழமை முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்துள்ளது. இது குறித்து அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். வீரர்கள் நலனுக்குதான் அவர் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மற்றொரு ராணுவ வீரரான, பிரதாப் சிங் தனது உயரதிகாரிகள் பூட்ஸை பாலீஷ் போட சொல்வதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சகத்திடம் தேஜ் பகதூர் யாதவுடைய கருத்து கேட்டதையடுத்து ராணுவ தளபதி பிவின் ராவத் வெள்ளிகிழமையன்று பேட்டியளித்தார்.
அப்போது ”வீரர்களின் பிரச்னைகளை போக்குவதற்கு புகார் பெட்டி உள்ளது. வீரர்கள் சமூக வலைதளங்களில் பேசி கருத்து தெரிவிக்க வேண்டாம். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்களின் பிரச்னைகளை தீர்க்க இரண்டு இடங்களில் குறைதீர்ப்பு பெட்டி வைக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராணுவ தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். கடமையின்போது பலியான வீரர்களுக்கு வீர வணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, ”எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னை நேரில் வந்து சந்திக்கலாம். ராணுவ வீரர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை விதிகள் உள்ளது. அதை மீறி, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது புகார்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ராணுவ வீரர் பிரதாப் சிங்கின் மனைவி ரிச்சா சிங், போபாலில் நிருபர்களிடம், “ ராணுவத்தில் நிலவும் குறைபாடுகளை நீக்ககோரி எனது கணவர் கடந்த 4 நாட்களாக உத்தரப் பிரதேசம் பதேகர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக நானும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன் என தெரிவித்திருந்தார்.
அடுக்கடுக்காக எழுந்த குற்றாச்சாட்டினை சுட்டிக்காட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி ரோகினி மற்றும் சங்கீதா திங்ரா சேக்கால் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், “ராணுவ வீரர்கள் தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை அளிக்க எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை, சாஸ்த்ரா சீமா பால் மற்றும் அசாம் ரைபில்ள் படைக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்பு படை பகதூர் யாதவ் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை அறிக்கையை அளிக்க எல்லைப் பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டது. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகவும் பதில் கோரியது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: