வியாழன், 19 ஜனவரி, 2017

3 வது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைகிறது .. போலீசார் தடியடி ..

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். வகுப்பு புறக்கணிப்பு : தமிழகம் முழுவதும் இன்று 3வது நாளாக ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் துவங்கி, தற்போது தமிழகம் முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்று வருகின்றனர்.
விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட போதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிகளுக்கு விடுமுறை :

 போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகள் ‛‛ தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை தொடர்ந்து நடத்த வேண்டும். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட. நாட்டு மாடு இனங்களில் வீரியமான காளை கண்டறியும் இனபெருக்க அறிவியலாகவே இதை நாம் பார்க்க வேண்டும். நாட்டு மாடு இனங்களை அழித்து வெளிநாட்டு மாடுகளை இறக்குமதி செய்யும் சூழ்ச்சிகாரர்களாகவே பீட்டாவை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என, பீட்டா போன்ற அமைப்புகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் நாங்கள் எச்சரிக்கிறோம்'' என்று முழக்கமிட்டு ஜல்லிகட்டிற்கான தங்கள் ஆதரவுகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு இன்று கல்லூரி நிர்வாகங்களே விடுமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் இன்று போராட்டம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் அறிவிப்புக்காக காத்திருப்பு :
 இந்த போராட்டத்திற்கு மாணவ மாணவிகள், இளைஞர்கள் மட்டுமல்லாது பல தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இந்த போராட்டத்திற்கு தமிழக அளவில் வணிகர்கள் ஆதரவு தருவார்கள் என கூறப்படுகிறது. எனினும் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வெளியிடும் அறிவிப்பு மூலமே அடுத்தக்கட்ட போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனவும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.  தினமலர்

கருத்துகள் இல்லை: