புதன், 18 ஜனவரி, 2017

அலங்கா நல்லூரில் கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் விடுதலை.

mdu1
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை அலங்காநல்லூரில் 21 மணி நேரமாக போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். உச்ச நீதிமன்றம் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

இதனிடையே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். 21 மணி நேரமாக நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது. அதிகாலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர் காவல்துறையினர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் இரண்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அணி அணியாக பொதுமக்கள் திரண்டு வந்து மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலையவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், கைதான இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டும்  என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த விஜயேந்திர பிதாரி, கைதானவர்கள் விடுவிக்கப் படுவார்கள் நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று தெரிவித்தார். ஆனால், அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது
இதனிடையே, அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயநேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் கைது செய்துள்ளோம். மேலும், மற்றவர்களையும் விடுவிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களையும் விடுவித்தால்தான் நாங்கள் கலைந்து செல்லோம் என்று போராட்டத்தினர் தெரிவித்து வருகின்றனர். தினமணி

கருத்துகள் இல்லை: