வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு ... சென்னை உயர் நீதிமன்றம் தலையிட மறுப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் இப்பிரச்சினையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெரினாவில் 2-வது நாளாக புதன்கிழமை மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், "சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு கோரி நடைபெற்றுவரும் போராட்டம் அறவழியில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. அப்படியிருந்தும் போராட்டக்காரர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கடற்கரை பகுதியில் செவ்வாய் இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர்கூட வழங்கப்படவில்லை" என வழக்கறிஞர் கே.பாலு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். ஆனால், தற்போதைய சூழலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. இதற்கான காரணத்தை நீதிபதிகள் விளக்கியபோது, "ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில் உயர் நீதிமன்றமோ மாநில அரசோ எதுவும் செய்வதற்கில்லை. மேலும், மெரினா கடற்கரை போராட்டம் நடத்துவதற்கான இடமும் அல்ல. இத்தகைய சூழலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை" என்றனர்.  tamilthehindu

கருத்துகள் இல்லை: