திங்கள், 28 ஏப்ரல், 2014

சகாயம் IAS : 1999 - 2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்


சென்னை: என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் சகாயம் ஐஏஎஸ். மனுக்கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள அங்குசம் என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்தக் காட்சி, தேசிய கீதம் இசைத்த பிறகு முடிந்தது. படம் முடிந்ததுமே, அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும் 'தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள்', என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கோ ஆப்டெக்ஸ் இயக்குநர் சகாயம் ஐஏஎஸ் பங்கேற்றார்.
இங்கே இந்த நூல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நேர்மையான கருத்தை இந்த சமூகத்தில் விதைக்க முடியுமா என்று மனுக்கண்ணன் கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன். லஞ்சம் என்பது எழைகளுக்கு எதிரானது. பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் விரோதமானது. தேசத்துக்கு தடையானது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 சாதாரண மக்கள் கையில் கிடைத்துள்ள அசாதாரண ஆயுதம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி 'அங்குசம்'படமெடுத்துள்ள இயக்குநர் மனுக்கண்ணன் நிச்சயம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
நம்நாட்டு தேச விடுதலைக்கு பாடுபட்டவர்களை நாம் எப்படி மதிக்கிறோம்? என்ன தெரிந்து கொண்டு இருக்கிறோம்.? இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தாகத்தோடும் வேகத்தோடும் வருகிற இளைஞர்கள், படைப்பாளிகள், முதியவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். மதுரையில் நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் அன்று திங்கள் கிழமை மக்களிடம் மனுக்கள் வாங்குவதுண்டு. பல ஊர்களிலிருந்து தொலை தூரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்படி ஒரு நாள் மதிய உணவு கூட உண்ணாமல் 3, 4 மணிவரை வாங்கினேன்.
முடித்துவிட்டு வெளியே வந்த போது ஒரு 45 வயதுக்காரர் அழுக்குச்சட்டை கைலியுடன் வந்தார். 10 நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் இருந்தார். முன்பே வரவேண்டியதுதானே என்றேன். கூட்டமாக இருந்தது அய்யா என்றார். எங்கே இருந்தீர்கள் என்றேன். இங்குதான் இருந்தேன் என்றார். நீங்கள் யார் என்றேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றார். நான் அதிர்ந்தேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றுசொல்ல வேண்டியதுதானே என்றேன். காவலர்கள் உள்ளே விடவில்லை என்றார். உனக்கு இங்கே நிற்க உரிமை வாங்கிக் கொடுத்தது என் பாட்டன்தான் என்று சொல்ல வேண்டியதுதானே?என்றேன் 'என்ன செய்கிறீர்கள்' என்றேன். அவ்வளவு வறுமையில் இருந்தார். கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கிறோம் என்றார். 'அப்படி பெயிண்ட் அடித்ததில் கீழே விழுந்து சகோதரருக்கு அடிபட்டு காயமாகி முடியாமல் இருக்கிறார் உதவுங்கள்,' என்றார். திருமணம் கூட செய்யவில்லை. நான் உடனடியாக மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட உழவர் உணவகம் தொடங்க கடன் அனுமதித்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.
வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டவர் வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கையிலும் காலிலும் விலங்குகள் போடப்பட்டு செக்கிழுத்தவர். அப்போது குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? அவர் செக்கிழுக்கட்டும் கை கால் விலங்குகளை கழற்றி விட்டு இழுக்கச் செய்யுங்கள் என்பதுதான். அவரது குடும்பமே வக்கீல் குடும்பம். அவரது குடும்பத்துக்கு வந்த நிலையைப் பாருங்கள். இதுதான் தியாகிகளின் நிலைமை. என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?
நான் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் மக்களிடம் மனுக்கள் வாங்கியபோது உமாராணி என்கிற ஒரு பெண்மணி உதவி கேட்டார். 42 வயதிருக்கும். என் தந்தையின் தகுதிக்கு ஏற்றமாதிரி உதவுங்கள் ஐயா என்றார். தந்தையின் தகுதி என்றால் உங்கள் தந்தை யார் என்றேன். அவர் பாண்டமங்கலம் தர்மலிங்கம் பிள்ளை என்றார். தர்மலிங்கம் பிள்ளை சுதந்திரப் போராட்டவீரர். போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்துகளை இழந்தவர்.
அவருக்கு உடனடியாக என்னால் உதவ முடியவில்லை. வட்டாட்சியரைக் கேட்டேன். முடியாது விதிகள் இல்லை என்றார். ஏன் என்றேன். சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கு 25 வயது வரைதான் உதவித்தொகை கிடைக்கும் என்றார். அதுதான் சட்டம். நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம்? அதை மாற்ற வேண்டும் என்று போராடி தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு எழுதி கருத்துரு பெற்று சிறப்பு இனமாக கருதிட எழுதினேன். 5 ஆயிரம் பெற உதவினேன். ஐயா என்று உதவி கேட்ட உமாராணி இப்போது அண்ணா என்கிறார். என்னைப் பார்க்க சென்னை வருவதாகக் கூறினார். நானே நேரில் போய் அவரைப் பார்த்த போது அவருக்கு இரு கண்பார்வையும் போய்விட்டதை அறிந்த போது வேதனைப்பட்டேன். தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தியாகிகள் வரலாறுகளை எடுத்துக் சொல்லுங்கள்.
இந்த தேசத்தில் 1999 - 2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நம் உணவுக்கு பயிரிடும் விவசாயிகள் நிலை. நம் நாகரிகம் பண்பாட்டை காக்கும் நெசவாளர்கள் வறுமையில் இருக்கிறார்கள். கோ ஆப் டெக்ஸ் இயக்குநராக இருக்கிறேன். இப்போது கண்டாங்கி சேலை மீட்டுருவாக்கம் திட்டத்தை செய்கிறோம்.
3 மாதங்களுக்கு முன் காரைக்குடி சென்றேன். அங்கு அவ்வளவு வறுமை. பல வீடுகளுக்கு கதவுகள் இல்லை. கதவுகள் போட முடியாத அளவுக்கு அவ்வளவு வறுமை. இங்கு என்ன இருக்கிறது எடுத்துச் செல்ல என்கிறார்கள். எவ்வளவு வேதனை? என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?. இந்தக் கேள்விக்கு பதில் தேடவும் கேள்வி எழுப்பவும் அங்குசம் உதவும்?'' -இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: