ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ரேபரேலியை தக்க வைக்க சோனியா கடும் பிரயத்தனம்

ரேபரேலி :காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடும், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியை, அவர் நான்காவது முறையாக தக்க வைக்க, கடும் சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. 'ரேபரேலி நகரம் வாழ்கிறது; கிராமப்புறங்கள் தேய்கிறது' என, பா.ஜ., தீவிர பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியோ, தொகுதி மக்கள் சோனியாவை 'கை'விடமாட்டார்கள் என, நம்பிக்கையுடன் உள்ளது.சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின் ரேபரேலி தொகுதி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான தொகுதி. இங்கு, நான்காவது முறையாக,காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடுகிறார்.  சோனியாவோ, ராகுலோ பயந்து போய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவில்லை. தைரியமாக தங்கள் தொகுதிகளில் களமிறங்கி இருக்கிறார்கள்.
நான்காவது முறை இம்மாதம் 30ல், இந்த தொகுதி யில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. சோனியாவை எதிர்த்து, பா.ஜ., சார்பில், அஜய் அகர்வால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பர்வேஸ் சிங் போட்டியிடுகின்றனர். முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. சோனியாவுக்கு ஆதரவாக இந்த செயல் கருதப்படுகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி சார்பில், முன்னாள் நீதிபதி பக்ருதீன் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டது; கடைசி நேரத்தில் அவர், போட்டியிடப் போவதில்லை எனக் கூறி விலகி விட்டார். இதையடுத்து, சமூக ஆர்வலரான, அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில், 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, சோனியா முதலில், 2004ல் போட்டியிட்டார். 'ஆதாயம் தரும் இரட்டை பதவியில் உள்ளார்' என, சர்ச்சை எழுந்ததை அடுத்து, பதவியை அவர் ராஜினாமா செய்தார்.பின், 2006 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2009ல் போட்டியிட்டு, 3.72 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இப்போது நான்காவது முறை வெற்றிக்காக தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ளார்.

காங்கிரசின் குடும்ப தொகுதியான இங்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளதால், பா.ஜ., சார்பில், ம.பி., முன்னாள் முதல்வர், உமா பாரதியை நிறுத்த முயற்சி நடந்தது. ஆனால், அவர், உ.பி.,யின் ஜான்சி தொகுதியை விட்டு நகர மாட்டேன் என, திட்டவட்டமாக கூறிவிட்டதால், கையில் கிடைத்த வேட்பாளராக, பா.ஜ., வழக்கறிஞர் அஜய் அகர்வால் நிறுத்தப்பட்டுள்ளார். ரேபரேலியில், சோனியாவுக்காக, அவர் மகள் பிரியங்கா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இப்போது, மத்தியில் காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, மோடி அலை ஆகியவற்றை பயன்படுத்தி, எப்படியும் வெற்றி பெற, பா.ஜ.,முயற்சிக்கிறது.


400 தொழிற்சாலை:



வாக்காளர்களை கவர, பா.ஜ., கூறும் புகார்கள்:
*சோனியா பல முறை வெற்றி பெற்றுள்ள போதும், ரேபரேலி நகர் பகுதியில் தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; கிராமப்புறங்கள் மோசமாகத் தான் உள்ளன.
*தொகுதி முழுவதும் பொத்தல் விழுந்த, வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகள், கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்னை, அடிப்படை வசதிகள் இல்லை.
*ரேபரேலி நகரில் முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், தொகுதி முழுவதும், ஆரம்ப பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை.
*நகரை சுற்றிலும், நான்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'சூப்பராக' உள்ளன. இது, சோனியா குடும்பத்தார் வந்து போவதற்காக, மத்திய அரசு கண்ணும் கருத்துமாக அமைத்துள்ளது.
*கிராமங்களில் சாலை வசதி மோசமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் போக முடியாத அளவிற்கு, குழிவிழுந்த சாலைகளாக உள்ளன.
*கிராமங்களில், உள்ள வீடுகள் அனைத்தும் களிமண்ணால் கட்டப்பட்டவையாக உள்ளன. இது, விருந்தினர் மாளிகையில் தங்கும், சோனியாவும், பிரியங்காவும் கண்டு கொள்வதில்லை.
*மூன்றாவது ரயில் பெட்டி தொழிற்சாலை, 2,700 கோடி ரூபாய் செலவில் ரேபரேலியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞர்கள் போதுமான வேலைவாய்ப்பு இன்றிஉள்ளனர்.
*கிராமங்களில் குடி தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லை.
*கடந்த முறை சோனியா வெற்றி பெற்ற போது, மக்கள் படிப்பறிவு பெற வேண்டும் என, வலியுறுத்தி னார். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி இங்கு, 79.39 சதவீத ஆண்களும், 65.46 சதவீத பெண்களும் படிப்பறிவு பெற்று உள்ளனர். இது தேசிய அளவிலான சதவீதத்தை காட்டிலும் குறைவாகும்.
*நகருக்கு வெளியே, மின் தட்டுப்பாடு தலையாய பிரச்னையாக உள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில், 800 சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன; 400க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும் செயல்படவில்லை.
*கிராமங்களில் அடிப்படை வசதி கள் மோசமாக உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டு வேலை திட்டத்தில் ஊழல், மதிய உணவு திட்டத்தில் முறைகேடு போன்றவை முக்கியமாக உள்ளன.இப்படி, பா.ஜ.,வினர், சோனியாவின் தொகுதியை, அக்குவேறு ஆணி வேறாக பிய்த்து காட்டி, மக்களிடம் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக, பிரியங்கா மற்றும் அவர் தாய் சோனியா,மக்களிடம் கூறுவதாவது:மத்திய அரசு பல வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டாலும், அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு தான் உள்ளது. அதில், அகிலேஷ் அரசு தவறி விட்டது.
*கிராமங்களில் சாலைகள் அமைப்பது, மின் சப்ளைக்கு தேவையான போஸ்டுகள், வயரிங் அமைப்பதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்குகிறது; இதை, செயல்படுத்துவதும், மின்சப்ளையை வழங்குவதும், மாநில அரசின் வேலை.
*கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறிவருகின்றனர். 

கருத்துகள் இல்லை: