புதன், 30 ஏப்ரல், 2014

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு: கைதான உளவாளி வாக்குமூலம்

சென்னை மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர்.அவனிடம் இருந்து சேட்டிலைட் போன், இந்திய வரைபடம், அமெரிக்க டாலர், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை தமிழரான இவன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. இவர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு பல முறை வந்து சென்றுள்ளான். ஐ.எஸ்.ஐ. உளவாளியான தீவிரவாதி ஜாகிர்உசேன், கியூ பிரிவு போலீசில் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:–
சென்னை மற்றும் பெங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்று வதற்காக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் என்னிடம் பேசி சம்மதிக்க வைத்தார்.
இதற்காக எனக்கு பெரிய அளவில் பண உதவிகள் செய்வதாக அவர் ஆசை காட்டினார். ஒரே ஒரு குழுவால் மட்டுமே குண்டு வெடிப்பு போன்ற நாசவேலைகளை செய்து விட முடியாது. இதனை செயல்படுத்துவது எப்படி? என்பது பற்றி பல கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் முதல்கட்டமாக எனக்கு தீவிரவாதிகளை சென்னை மாநகருக்குள் அழைத்து வந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்யும் பணிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கு முன்னதாக கள்ள நோட்டுகளை மாற்றிக் காட்டும் பரீட்சையும் எனக்கு வைக்கப்பட்டது.
இதன்படி பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நான் கடந்த 18–ந்தேதி சென்னைக்குள் ஊடுருவினேன்.
இதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபடியே தீவிரவாதிகளை எப்படி அழைத்து வருவது என்பது பற்றியும் நான் ஒத்திகை பார்த்தேன்.
கள்ளத்தோணிகள் மூலம் கடல் வழியாக மீனவர்கள் போல தீவிரவாதிகளை சென்னைக்குள் ஊடுருவ வைப்பதற்கு திட்டம் போட்டிருந்தேன். இப்படி வருபவர்களை தங்க வைப்பதற்காக இங்குள்ள சிலரது உதவியுடன் வாடகைக்கு வீடும் பார்த்து வந்தேன். இப்பணிகளை எல்லாம் முடித்து விட்டு விரைவில் தீவிரவாதிகளை சதிசெயலில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் போட்டிருந்தோம். எங்கெங்கு குண்டு வைப்பது? எப்படி செயல்படுத்துவது? என்பது பற்றி எல்லாம் ஆராய்ந்து வைத்திருந்தோம்.
எனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை (தீவிரவாதிகளை வரவழைத்து தங்க வைப்பது) கச்சிதமாக முடித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு ஜாகீர் உசேன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். malaimalar.com

கருத்துகள் இல்லை: