புதன், 30 ஏப்ரல், 2014

ஜெர்மனியில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 18 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் !

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் ஜெர்மனி நாட்டு வங்கியில் கருப்புப் பணத்தை வைத்திருக்கும் 18 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அதில், பல்வேறு அறக்கட்டளை வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த போதிலும், அரசியல்வாதிகளின் பெயர்கள் ஏதும் இடம் பெறவில்லை. > "மத்திய அரசின் இந்தப் பட்டியல் மீது ஆலோசனை நடத்தி மே 1ஆம் தேதி முடிவெடுக்கப்படும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அறிக்கை தாக்கல்: "கருப்புப் பணத்தை வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து, ரஞ்சன் பிரகாஷ் தேசாய், மதன் பி. லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஜெர்மனி, லிச்டென்ஸ்டைனில் உள்ள எல்.எஸ்.டி. வங்கியில் 26 இந்தியர்கள் கருப்புப் பணம் வைத்திருக்கிறார்கள். இந்தப் பட்டியல் இந்தோ - ஜெர்மன் இடையே மேற்கொள்ளப்பட்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படி 2009ஆம் ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்தது.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 26 பேரில் 18 பேர் மீது விசாரணை முடிவடைந்து, 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மீதமுள்ள 8 பேர் மீது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆகையால், அந்த 8 பேரின் பெயர்களை வெளியிட வேண்டாம்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல்: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்டியலில், அம்புருநோவா அறக்கட்டளை மற்றும் மார்லைன் மேலாண்மையைச் சேர்ந்த மோகன் மனோஜ் துபிலியா, அம்பரீஷ் மனோஜ் துபிலியா, பாவ்யா மனோஜ் துபிலியா, ரூபல் துபிலியா, மனோஜ் துபிலியா. மனிச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த ஹஷ்முக் ஈஷ்வர்லால் காந்தி, சிந்தன் ஹஷ்முக் காந்தி, மது ஹஷ்முக் காந்தி, மறைந்த மிராவ் ஹஷ்முக் காந்தி.
ருவிஷா அறக்கட்டளையைச் சேர்ந்த சந்திரகாந்த் ஈஷ்வர்லால் காந்தி, ராஜேஷ் சந்திரகாந்த் காந்தி, தனலக்ஷ்மி சந்திரகாந்த் காந்தி.
டாய்நீஸ் ஸ்டிஃப்டங் அறக்கட்டளையைச் சேர்ந்த அருண்குமார் ரமணீக்லால், டிரையட் ஸ்டிஃப்டங் அறக்கட்டளையைச் சேர்ந்த ஹர்ஷத் ரமணீக்லால், வெப்ஸ்டர் பவுண்டேஷனைச் சேர்ந்த கே.எம். மம்மன், ஊர்வசி பவுண்டேஷனைச் சேர்ந்த அருண் கோச்சார், ராஜ் பவுண்டேஷனைச் சேர்ந்த அசோக் ஜெய்புரியா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
சிறப்பு விசாரணைக் குழு: இதனிடையே, "சுவிஸ் வங்கியில் ரூ. 19 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் வைத்திருக்கின்றனர். அந்தப் பணத்தை வைத்திருப்பவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்' என்று மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத் மலானி வலியுறுத்தினார். இது குறித்து அடுத்த விசாரணையின்போது தனி மனுவாக தாக்கல் செய்ய ராம் ஜேத்மலானியை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், "கருப்புப் பணம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட வேண்டிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம்பெற வேண்டிய முன்னாள் நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசும், மனுதாரர்களும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்' என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். dinamani.com

கருத்துகள் இல்லை: