டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை யாரும் கிண்டல் கேலி செய்ய வேண்டாம். அது
அப்படிச் செய்பவர்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர்
ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு
ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ரமேஷ், ஆம் ஆத்மி
கட்சியை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். அது தவறு. அப்படிச் செய்தால்
அவர்களுக்கே அது பாதகமாக அமையும்.
ஆம் ஆத்மியைக் கேலி செய்வது நமக்கு நாமே 'ஆப்பு' வைத்துக் கொள்வது போல..
ஜெயராம் ரமேஷ் பேச்சு!
ஆம் ஆத்மி கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப் புது அவதாரங்களில் மக்கள்
பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு வியாபிக்கும் அபாயம் உள்ளது.
அவர்களை நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. காரணம், அவர்கள் ஊழலுக்கு எதிராக
போராடுகிறார்கள். அரசியலில் தூய்மைக்காக போராடுகிறார்கள். அரசியலில்
எளி்மைக்காக போராடுகிறார்கள். அத்தனையும் மதிக்கத்தகவை, நியாயமானவை. எனவே
அவர்களைக் கிண்டல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
இன்றுதான் நாம் ஆம் ஆத்மி குறித்து கவலைப்படுகிறோம். ஆனால் பாஜக ஏற்கனவே
தூக்கத்தைத் தொலைத்து விட்டது. நாங்கள்தான் ஆம் ஆத்மி என்று பிரகாஷ் காரத்
கூற ஆரம்பித்து விட்டார். அகாலிதளம் பஞ்சாபில் சுதாரிக்காவிட்டால் பஞ்சாபை
ஆம் ஆத்மி பிடித்து விடும். அகாலிதளத்தை அழித்து விடும்.
ஆத் ஆத்மி தசாவதாரம் போல இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு
பிரச்சினையுடன் அது வியாபிக்கும். கவனமாக இருக்க வேண்டும்.
லோக்பால் மசோதாவை நாம் 2 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருந்தால் டெல்லி
தேர்தலில் நாம் இவ்வளவு மோசமான தோல்வியைச் சந்தித்திருக்க மாட்டோம்.
ஏ.கே.அந்தோணியைப் பாருங்கள். எவ்வளவு எளிமையானவராக இருக்கிறார். அவரைப் போல
எளிமையான வாழ்க்கைக்கு அரசியல்வாதிகள் மாற வேண்டும். மக்கள் அதைத்தான்
விரும்புகிறார்கள்.
இயல்பான, சாதாரணமான வாழ்க்கையை அரசியல்வாதிகள் வாழ வேண்டும். ஆம் ஆத்மியால்
அரசை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் மாற்றத்தை கொண்டு வர
முடியும் என்பதை அவர்கள் நிரூபித்து விட்டனர். இது நாடு முழுவதும் பரவும்
வாய்ப்பையும் நாம் மறுக்க முடியாது. மக்களுக்கான இடத்தை அவர்கள்
ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர். எந்த அரசியல் கட்சியும் சாராத ஒரு
வாய்ப்பு மக்களுக்கு இப்போது கிடைத்து விட்டது என்று கூறியிருந்தார் ரமேஷ்.
மணீஷ் திவாரிக்கு கொட்டு
2 நாட்களுக்கு முன்புதான் மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி, ஆம் ஆத்மியை
விமர்சித்துப் பேசியிருந்தார். ஆம் ஆத்மி குறித்துக் கவலைப்படத் தேவையில்லை
என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்குப் பதில் தரும் வகையில்
இப்படி பேசியுள்ளார் ரமேஷ்.
காங். கருத்துக் கூற மறுப்பு
ரமேஷின் கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இது காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல என்று அக்கட்சி
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், இது அவரது
சொந்தக் கருத்து. அதில் எந்த விசேஷமும், தகவலும் இல்லை என்றார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக