டெல்லியில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை வளைப்பதற்கு, பொது மக்களுக்கான அவசர உதவி தொலைப்பேசி எண்களை முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அதிகாரிகள் எவரேனும் லஞ்சம் கேட்டால், 011- 2735 7169 என்ற ஹெல்ப்லைனுக்கு தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லலாம். இது, ஹெல்ப்லைன் தானே தவிர, புகார் எண் கிடையாது" என்றார்.
இந்த ஹெல்ப்லைனுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னால், பாதிக்கப்பட்ட நபரே புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்க வழிவகுக்கப்படும்.
அதற்கான வழிகாட்டுதல்களை டெல்லி ஊழல் தடுப்புப் படை வழங்கும். மக்கள் தங்கள் செல்போன் மூலமே லஞ்ச முறைகேடுகளைப் பதிவு செய்யலாம்.
இந்தப் புதிய திட்டம் தொடர்பாக விவரித்த அரவிந்த் கேஜ்ரிவால், "லஞ்சம் வாங்குவோருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதே இந்த வியூகத்தின் நோக்கம். தாம் லஞ்சம் கேட்பது செல்போனில் பதிவு செய்யப்படுகிறதோ என்ற அச்சம் அதிகாரிக்கு இருக்கும்.
இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஊழல் தடுப்புப் பிரிவில் போதுமான அளவில் நியமிக்கப்படுவர். தேவைப்பட்டால், காவல்துறையின் உதவியும் நாடப்படும்.
லஞ்சத்தை ஒழிக்கும் இந்தத் திட்டத்தால், ஒவ்வொரு குடிமகனுமே ஊழலுக்கு எதிரான போராளி ஆவார்" என்றார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லியில் துவங்கப்பட்டுள்ள இந்த ஹெல்ப்லைன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். tamil.thehindu.com