வெள்ளி, 10 ஜனவரி, 2014

Mumbai வடமாநிலத்திலும் பெரியார் கொள்கை முழக்கம்!


மும்பையில் தந்தை பெரியார் மற்றும் பொங்கல் விழா-
சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா
மும்பை, ஜன.8- மும்பையில் வரும் 11, 12 ஆகிய இரு நாள்களிலும் பெரியார் கொள்கை பரப்பு விழா நடைபெற உள்ளது.
பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் சமூகநீதி விருது வழங்கும் விழா முதல் நாள் அன்றும், தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் ஆகிய விழாக்கள் மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பிலும் நடை பெற உள்ளன.
அதன் விவரம் வருமாறு:
பெரியார் பன்னாட்டு மய்யம்  அமெரிக்கா - 2013 ஆம் ஆண்டுக்கான சமூக நீதி விருது மராட்டிய மாநில அமைச்சர் ஜகன் புஜ்பல் பெறுகிறார் அமெரிக்காவில் இயங்கி வரும் தந்தை பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகத் தொண்டாற்றிய பெருமக்களுக்கு கி.வீரமணி சமூக நீதி விருதுஅளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விருது 1996 ஆம் ஆண்டிலிருந்து அறிவிக் கப்பட்டு முதன் முதலாக மேனாள் இந்திய தலைமை அமைச்சர் விசுவநாத் பிரதாப் சிங், மேனாள் காங்கிரசு தலைவர் சீத்தாராம் கேசரி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், மேனாள் உ.பி. முதலமைச்சர் செல்வி மாயாவதி, ஜி.கே.மூப்பனார், கருநாடக தலைமை வழக்கறிஞர் பேரா.ரவி வர்மாகுமார் உட்பட பல முன்னணித் தலை வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் ஜகன்புஜ்பாலுக்கு விருது
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான கி.வீரமணி சமூக நீதி விருது 2013 மராத்திய மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜகன் புஜ்பாலுக்கு வழங்கப்படுகிறது. மராத்திய மாநிலத்தின் சமுகநீதிப் பேராளியான மகாத்மா புலேவின் கொள்கைகளைப் பரப்பி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றியமைக்காகவும், மண்டல் குழு அறிக்கையை செயல்படுத்த மிகுந்த உழைப்பிற்காகவும் இவ்விருது அவ ருக்கு வழங்கப்படுகிறது.
விருது வழங்கும் விழா 11.01.2014 அன்று காலை 11 மணிக்கு மும்பை, பிரபாதேவி அருகில் உள்ள இரவீந்திர நாட்டிய மந்திர் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவின் சிறப்பு விருந்தினராக மராத்திய மாநில ஆளுநர் கே.சங்கர நாராயணன் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்து உரையாற்றுகிறார். பெரியார் பன்னாட்டு மய்ய நிருவாக இயக்குநர் டாக்டர் சோம. இளங் கோவன் வரவேற்புரையாற்றுகிறார். விழாவில் மராத்திய மக்களும், தமிழ் மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென விருதுக்குழுவின் தலைவர் பேராசிரியர் இலக்குவன் தமிழ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியார் பன்னாட்டு மய்ய நிரு வாகிகள் டாக்டர் சோம.இளங் கோவன், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.கும ரேசன் ஆகியோர் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு விமானம் மூலம் மும்பை வருகின்றனர்.
தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு
இவ்விழாவினைத் தொடர்ந்து 12.01.2014 அன்று காலை 9.30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 135 ஆவது பிறந்தநாள் விழா - பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா மும்பை மாதுங்கா, மைசூர் அசோசியேசன் அரங்கில் கொண்டாடப்படுகிறது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார். பெரியார் படத்தை சீர் வரிசை சண்முக ராசன் திறந்து வைக்கிறார். மும்பை திராவி டர் கழகத் தலை வர் பெ.கணேசன் தொடக்கவுரையு டன் நிகழும் இவ் விழாவில் பெரி யார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன்,
இலெமுரியா அறக்கட்டளைத் தலைவரும், தமிழ் இலெ முரியா முதன்மை ஆசிரியருமான சு.குமணராசன், மும்பை புறநகர் தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான், மனித நேய இயக்க அமைப்பாளர் பி.கே. சங்கர் திராவிட், எழுத்தாளர் மன்ற தலைவர் பேரா. சமீரா மீரான் உள்பட பலர் கருத்துரை வழங்குகின்றனர். இறுதியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.
விழாவிற்கு எஸ்.எஸ்.அன்பழகன், வி.தேவதாசன், த.மு.பொற்கோ, த.மு.ஆரிய சங்காரன், வெ.ம.உத்த மன், பொ.அப்பாத்துரை, ம.சேசுராசு, எஸ்.ஏ.துரை, முகமதலி ஜின்னா, கொ.வள்ளுவன், சேதுராமன் சாத்தப்பன், நெல்லை சிறீதர், கே.வி.அசோக்குமார், சிவ.நல்ல சேகரன், தொல்.காமராஜ், புதிய மாதவி, இரவீந்திரன், வதிலை பிரதாபன், வழக்குரைஞர் சுபாஸ் சந்திரபோஸ், கோ.மா.விசுவநாதன், இறை சா.இராஜேந்திரன், கவிஞர் குணா, டி.கே.சந்திரன், மணிமாறன், தமிழ்நேசன், செ.அப்பாத்துரை உள்பட ஏராளமானோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இருவிழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் பொ.அன்பழகன் அய்.ஏ.எஸ்., சு.குமணராசன், அ.ரவிச்சந்திரன், பெ.கணேசன் ஆகியோர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: