வெள்ளி, 10 ஜனவரி, 2014

கலைஞர் குலாம் நபி ஆசாத் திடீர் சந்திப்பு ! இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லை.குலாம் நபி ஆசாத்


சென்னை: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் நேற்று இரவு திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகிய பிறகு, முதன் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குலாம் நபி ஆசாத்துடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலுவும் உடன் சென்றார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இது குறித்து குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் திடீர் சந்திப்பு வேலூர் சி.எம்.சி கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்தேன். நான் சென்னைக்கு வரும்போது எல்லாம், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியை சந்திப்பது வழக்கம். அதன் அடிப்படையில்தான் இன்றைய சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. கூட்டணி தொடர்பாக அவரிடம் எதுவும் பேசவில்லை என்றார். 
காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கலைஞர்  கூறியுள்ளாரே என்று ஆசாத்திடம் செய்தியாளர்கள் ஒருவர் கேட்டதற்கு, காங்கிரஸ்-திமுக இடையே 10 ஆண்டுக் கால கூட்டணி உண்டு. இரு கட்சிகளுக்கும் இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லை. இரு கட்சி தலைவர்களும் பரஸ்பரம் நட்புடனும், மரியாதையுடனும் பழகி வருகிறோம். திமுக எங்களுக்கு எதிரியல்ல என்று அவர் பதிலளித்தார். காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் ஏற்படுமா என்று கேட்டபோது, தேர்தல் நேரத்தில் தெரிய வரும் என்றார் ஆசாத். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் கடந்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தி.மு.க. விலகியது. அதன் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்காக காங்கிரஸிடம் இருந்து திமுக ஆதரவு கேட்டுப் பெற்றது. காங்கிரஸ் கொண்டு வந்த உணவு பாதுகாப்பு மசோதா சட்டம் உள்பட பல்வேறு மசோதாக்களை திமுக ஆதரித்தது. ஆனாலும் காங்கிரஸ் - திமுகவிடையே தமிழகத்தில் நல்லுறவு இல்லாமல் இருந்து வந்தது. கருணாநிதி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல்களும் அவ்வப்போது நிகழ்ந்து வந்தன. இந்நிலையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தார். இது தொடர்பாக பத்திரிகைகளும், தமிழகத் தலைவர்களும் சந்தேகம் எழுப்பியபோது, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கருணாநிதி மீண்டும் உறுதியளித்தார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர்களால்தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: