சனி, 11 ஜனவரி, 2014

Infosys நந்தன் நீலகேனி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ? பெங்களூரு தெற்கு தொகுதியில் !

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், முன்னாள் ஒருங்கிணைப்பு நிர்வாகியாகவும் இருந்த நந்தன் நீலேகனி, ஆதார் திட்ட தலைவராக நியமிக்கப்பட்டதால் அமைச்சருக்கு இணையான அந்தஸ்துடன் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலில் தெற்கு பெங்களூருவில் வெற்றி பெற்றால் அது காங்கிரசிற்கு பெரும் பலமாக இருக்கும் என கட்சி தலைமை நினைப்பதால், அந்த தொகுதியைச் சேர்ந்த நீலேகனிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், நந்தன் நிலேகனி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகின. ஆனால் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்தது. அவர் தெற்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்தன.

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்டு வந்த இன்போசிஸ் துணை நிறுவனரும், ஆதார் திட்டம் தலைவருமான நந்தன் நீலேகனி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குறும் பட்டியலில் கூட இடம் பெறவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட நந்தன் நிலேகனி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: அரசியல் நடவடிக்கையில் என்னை ஈடுபடுத்த வேண்டும் என நினைக்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சீட் வழங்கினால், நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன். இந்தியாவில் அரசியல் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். அதில் நான் இருக்க வேண்டும் என கருதுகிறேன். கார்ப்பரேட் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நல்லவர்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள் என கூறினார்.
nakkheeran.in

கருத்துகள் இல்லை: