செவ்வாய், 7 ஜனவரி, 2014

அழகிரியின் பேட்டி கண்டிக்கத்தக்கது- ஒழுங்கு நடவடிக்கை: கருணாநிதி எச்சரிக்கை


சென்னை: தேமுதிக- திமுகவோடு கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என்று கழகத் தலைவராகிய தாம் தெரிவித்த கருத்துக்கு மாறாக மு.க. அழகிரி அளித்த பேட்டி வருந்தத்தக்கது- கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை: கேள்வி: மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர், மு.க. அழகிரி 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி கருணாநிதி: தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற தீய சக்திகளின் கொட்டம் அடங்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்ற தமிழ் நாட்டு மக்களைத் திசை திருப்பி அப்படியொரு கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் சிலவற்றில் இரு கட்சிகளின் முன்னோடிகளைப் பற்றிய விமர்சனங்களையும் விஷமத்தனமான தகவல்களையும் வழங்கி, தமிழ்ப்பெரு மக்களை திசை திருப்புகின்ற காரியத்தில் சில வஞ்சக ஏடுகள் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கின்றன. "தே.மு.தி.க., திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணிக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்" என்று நான் சொன்னதையே பொறுத்துக் கொள்ள முடியாமல், எங்கே அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தவறான விமர்சனக் கணைகளைத் தொடுத்திடத் தொடங்கியிருக்கிறார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள். தே.மு.தி.க. வோடு தேர்தல் உறவு வேண்டாம் என்று மு.க. அழகிரி கூறியதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்கும், அல்லது அழகிரி அப்படி கூறியிருந்தால் அந்தக் கருத்துக்கும் தி.மு.கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில் எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி சேருவது என்று தீர்மானிப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு, பொதுக் குழு அல்லது அந்தக் குழுக்களால் அதிகாரம் தரப்பட்ட கழகத்தின் தலைமை மட்டுமே. அந்த வகையில் "தே.மு.தி.க. வுக்கும், தி.மு.க. வுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி தான்" என்று "கழகத்தின் தலைவர்" என்ற முறையில் நான் சொன்ன கருத்துக்கு மாறாக மு.க. அழகிரியின் பேட்டி அமைந்திருப்பது வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும். இது போன்ற தேவையில்லாத கருத்து மாறுபாடுகளை வெளியிட்டு கழகத்தின் கட்டுப்பாட்டைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கழகத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பதை மிகவும் கண்டிப்பாக தெரிவித்துக் கொள்வதோடு, இந்த முடிவு நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் கழகத்தினர் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாகும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: