வியாழன், 9 ஜனவரி, 2014

சினிமாவில் நான் நடிகர்,நடிகைகளிடம் நன்றியை எதிர்பார்ப்பதில்லை: ஆர்.பி.சவுத்ரி

சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சவுத்ரி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘நடிகர் விஜய்க்கும், சூப்பர் குட் பிலிம்சுக்கும் எப்போதுமே ஒரு ராசி உண்டு. எங்கள் தயாரிப்பில் அவர் ஏற்கனவே நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி ஆகிய படங்கள் வெள்ளிவிழா கண்டன. இப்போது அவர் நடித்துள்ள ‘ஜில்லா,’ எங்கள் தயாரிப்பில் 85-வது படம். நாங்கள் தயாரித்த ‘அரண்’ என்ற படத்தில், மோகன்லால் நடித்தார். அந்த படம், ‘கீர்த்தி சக்ரா’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன. எங்கள் நிறுவனத்துக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. அதில், விஜய்யும், மோகன்லாலும் இணைந்து நடித்து, ‘ஜில்லா’ படம் வெளிவர இருக்கிறது. இதுவரை வந்த விஜய் படங்களை விட, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். படத்தின் மீது உள்ள நம்பிக்கையில், மோகன்லால் சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு பதில், கேரள வினியோக உரிமையை வாங்கியிருக்கிறார். அங்கு அவர், 300 தியேட்டர்களில் படத்தை வெளியிடுகிறார். தமிழ்நாட்டில், 600 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் 250 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
முன்பெல்லாம் கவித்துவமான காதல் படங்களையும், குடும்ப சென்டிமெண்ட் கதைகளையும் மட்டுமே தேர்வு செய்து படமாக்கினோம். இப்போது அதுபோன்ற கதைகள், டி.வி.தொடர்களில் வந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களின் ரசனையும் மாறிவிட்டது. அதனால், காலத்துக்கு ஏற்ப ஜனரஞ்சகமான படங்களை தயாரிக்கிறோம்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், சரத்குமார் 13 படங்களில் நடித்து இருக்கிறார். எங்கள் நிறுவனத்தில் அதிக படங்களில் நடித்த கதாநாயகன் இவர்தான். அதேபோல் கே.எஸ்.ரவிகுமார் 6 படங்களை டைரக்டு செய்திருக்கிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்து இருக்கிறோம்.

‘‘கடமையை செய். பலனை எதிர்பாராதே’’ என்று சொல்வார்கள். அதன்படி, யாரிடமும் நாங்கள் நன்றியை எதிர்பார்ப்பதில்லை.

எனக்கு ஓய்வு பெறும் வயது வந்துவிட்டதால், ‘ஜில்லா’ படத்தில் என் மகன்கள் சுரேஷ், ஜீவன், ரமேஷ், ஜீவா ஆகிய 4 பேர்களையும் பங்குதாரர்களாக்கி இருக்கிறேன்.’’

இவ்வாறு ஆர்.பி.சவுத்ரி கூறினார்.

கருத்துகள் இல்லை: