செவ்வாய், 7 ஜனவரி, 2014

தேவயானி விவகாரத்தில் 30 நாட்களில் ஜெயிப்பாரா இந்திய டாப் ராஜதந்திரி ஜெய்சங்கர்?

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராஜதந்திர முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ள, இந்திய துணைத்தூதர் தேவயானி விவகாரத்தில், வழக்கை 30 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார், தேவயானியின் வக்கீல்.
இந்த வழக்கின் விசாரணை, இம்மாதம் 13-ம் தேதி நீதிபதி சாரா நெட்பர்ன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக தற்போது தேதி குறிக்கப்பட்டுள்ளது. விசாரணையை 30 நாட்களுக்கு பிற்போட்டு, பிப்ரவரி 12-ம் தேதிக்கு மாற்ற வேண்டும் என தேவயானியின் வக்கீல் டேனியல் அர்ஷாக் மனு செய்துள்ளார்.

தற்போது உள்ள நிலையில், இம்மாதம் 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், அன்றைய தேதியில் அரசு தரப்பு முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதையடுத்து, முதற்கட்ட விசாரணையில் அரசு தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்கள் கோர்ட் ஆவணங்களில் பதிவாகிவிடும்.
இது, தேவயானிக்கு சாதகமானது அல்ல.
காரணம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் இந்தியாவால் ராஜதந்திர அழுத்தம் கொடுக்கப்படுவதால், தேவயானி மீதான குற்றப்பத்திரிகையை அமெரிக்கா தாக்கல் செய்யாமல் விட்டுவிடலாம் என இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால், குற்றப்பத்திரிகை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வாதங்களும் அமெரிக்க ஜஸ்டிஸ் சிஸ்ட்டத்தில் ரிக்கார்ட் ஆகிவிட்டால், அதன்பின் தம்மால் செய்யக்கூடியது ஏதுமில்லை என அமெரிக்காவால் கையை விரித்துவிட முடியும்.
அந்த சந்தர்ப்பத்தை அமெரிக்காவுக்கு கொடுக்க விரும்பவில்லை இந்தியா என்பதையே, தேவயானி மீதான கோர்ட் விசாரணையை 30 நாட்களுக்கு பிற்போடுமாறு தேவயானியின் வக்கீல் மனு செய்திருப்பது காட்டுகிறது.
அந்த 30 நாட்கள் கொடுக்கும் கால அவகாசத்தில், இந்த விவகாரத்தை முடித்துவிட முடியும் என்று நினைக்கின்றனர், இந்திய ராஜதந்திரிகள்.
இந்தியா கொடுக்கும் ராஜதந்திர அழுத்தத்துக்கு, இதுவரை அசைந்து கொடுக்கவில்லை அமெரிக்கா.
சாதாரண கிரிமினல் குற்றச்சாட்டுக்காக, இந்தியாவின் துணைத்தூதர் என்ற அந்தஸ்திலுள்ள ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை கைகளில் விலங்கிட்டு கைது செய்து, ஆடைகளை களைந்து சோதனையிட்டது, இந்தியாவுக்கு ஏற்படுத்தப்பட்ட டிப்ளமட்டிக் டிஸ்கிரேஸ் என்பதை, அழுத்தமாக சொல்கின்றனர் அமெரிக்காவில் உள்ள இந்திய ராஜதந்திர வட்டாரமும், இந்திய வெளியுறவுத்துறையும்.
ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ, இப்படியான குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்படும்போது, அமெரிக்க சட்டப்படி அனைவருக்கும் பொதுவான வழமையான நடைமுறைதான் இது என்கின்றனர்.
இந்திய துணைத்தூதர் என்ற விதத்தில் தேவயானிக்கு ராஜதந்திர பாதுகாப்பு (diplomatic immunity) உள்ளது என வாதிடுகிறது இந்தியா.
ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ, “ராஜதந்திர செயல்பாடுகளில் தேவயானி ஈடுபட்டபோது குற்றம் செய்திருந்தால்தான், ராஜதந்திர பாதுகாப்பு உள்ளது. இது அவரது தனிப்பட்ட விவகாரம் (தேவயானியின் வீட்டு பணியாளருக்காக செய்யப்பட்ட விசா மோசடி). இதில் தேவயானி வகித்த பதவிக்கு (துணைத்தூதர்) ராஜதந்திர பாதுகாப்பு கிடையாது என்ற சர்வதேச சட்டத்தை சுட்டிக் காட்டுகின்றனர்.
இதையடுத்து இந்தியா துரிதமாக செயல்பட்டு, நியூயார்க்கில் உள்ள இந்தியாவின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் சிறப்பு பதவி ஒன்றில் தேவயானியை நியமித்தது. அந்த பதவிக்கு, முழுமையான ராஜதந்திர பாதுகாப்பு (full diplomatic immunity) உள்ளது. ஆனால், இந்த புதிய பதவிக்கு தேவயானியை புதுடில்லி நியமித்தாலும் அதற்கு அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் கிளியரன்ஸ் கொடுக்க வேண்டும்.
தேவயானிமீது ஒரு குற்றச்சாட்டு பென்டிங்கில் உள்ளதை காரணம் காட்டி, இன்றுவரை இந்த புதிய பதவிக்கு அமெரிக்க அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் கிளியரன்ஸ் கொடுக்கவில்லை.
இதுதான், இன்றைய தேதியில் இந்த விவகாரத்தில் உள்ள நிலைமை. விவகாரம் இழுபறியில் உள்ள நிலையில் கோர்ட் விசாரணைக்கான தேதி நெருங்கி விட்டதில், 30 நாட்கள் எக்ஸ்டென்ஷன் கேட்டு மனு செய்திருக்கிறார்கள்.
இந்திய ராஜதந்திரிகள், முக்கியமாக அமெரிக்காவில் இந்தியாவுக்கான புதிய தூதராக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் டாப் ராஜதந்திரி ஜெய்சங்கர், இந்த 30 நாட்களுக்குள் இதை எப்படி ஹேன்டில் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: