சனி, 11 ஜனவரி, 2014

தேமுதிகவோடு திமுக அணியில் காங்.?: குலாம்நபி- கருணாநிதி ஆலோசனை

சென்னை: அரசியலில் நிரந்தரம் எதுவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிதர்சனமாக்கிக் கொண்டிருக்கின்றன அரசியல் நிகழ்வுகள்.. காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது திமுக. ஆனால் இந்த திட்டவட்டத்துக்கும் கூட செக் வைக்க முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தியிருக்கிறது. மத்திய அரசில் இருந்து வெளியேறி, கூட்டணியில் இருந்து விலகி பொதுக்குழுவைக் கூட்டி கூட்டணியே கிடையாது என்று அறிவித்து திமுக, காங்கிரஸைவிட்டு வெகுதொலைவில் பயணிப்பதுபோல் ஒரு தோற்றம் உருவானது.. அந்த சூழலில் தேமுதிகதான் ஒரு நம்பிக்கையாக இருந்து திமுகவும் ஆவலுடன் காத்திருந்தது.
 ஆசாத் சந்திப்பு இந்த சூழ்நிலையை தற்போது தலைகீழாக மாற்றிப் போட்டிருக்கிறது மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தின், கருணாநிதியுடனான சந்திப்பு.
ஒருபக்கம் தென்மண்டல திமுக அமைப்பு செயலர் அழகிரியின் கடும் எதிர்ப்பால் தேமுதிக வருமோ என்ற தவிப்பில் இருந்த திமுகவுக்கு இந்த சந்திப்பு நிச்சயம் ஆறுதலாகத்தான் இருந்திருக்கும்.
தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பற்றியெல்லாம் பேசவில்லை என்று என்னதான் ஆசாத் சொன்னாலும் திமுக வட்டாரங்களோ, காங்கிரஸ்- திமுக கூட்டணி பற்றி ஆசாத் வலியுறுத்தியதையும் குறிப்பாக திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சோனியா விரும்புவதையும் ஆசாத் சுட்டிக்காட்டியதாக கூறுகின்றன.
விரைவில் திமுக தலைவர் கருணாநிதி கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவே தொலைபேசியில் விரைவில் பேசுவார் என்றும் குலாம்நபி ஆசாத் உறுதி கொடுத்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன
அத்துடன் திமுகவுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்ற உறுதியுடன் கூட ஆசாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன
ஏற்கெனவே வேட்பாளர் தேர்வுக் குழுக்களை அமைத்து களத்தில் குதித்துவிட்ட காங்கிரஸ் கட்சி விரைவிலேயே திமுக-தேமுதிக-காங்கிரஸ் கூட்டணியையும் அமைத்துவிடும் என்ற நம்பிக்கை உறுதியாக இருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியினரின் கருத்தாக இருக்கிறது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: