வம்சம் படத்தின் மூலம் கவனத் துக்குரிய இசையமைப் பாளராக அறிமுகமானவர்
தாஜ்நூர். பாடல் வரிகளை சிதைக்காத, கதைக்கான இசையைத் தருவதில், இளம்
இயக்குநர்களின் தேர்வாக இருக்கும் தாஜ்நூர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம்
15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர். அடுத்தமாதம் கும்பகோணத்தில் ’இசையும்
இஸ்லாமும்’ என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் 8 -வது இஸ்லாமிய தமிழ் இலக்கிய
மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள ’சூஃபி இசை நிகழ்ச்சியை’ நிகழ்த்த
இருக்கிறார். இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த தாஜ்நூரை ’தி இந்து
’வுக்காக சந்தித்தோம்.
ரஹ்மானிடம் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தை சுருக்கமாக பகிரமுடியுமா?
நான் படித்தது வளர்ந்தது எல்லாமே சேலத்தில். கணிப்பொறியில் நானொரு
ஹார்ட்வேர் பட்டதாரி. படித்து முடித்ததும் சென்னையில் ஒரு நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்தேன். அது 1992 ஆம் வருடம். மல்டி மீடியா படிப்பு
அப்போதுதான் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை ஆர்வமாக படித்து
முடித்தேன். வீடியோ கேம்களுக்கு பின்னணி இசையமைப்பதைப் பற்றி ஒரு
புராஜெக்ட் செய்திருந்தேன். அப்போது நான் இசைக்கு ரசிகனே தவிர, இசையைப்
பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
1996 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் காலைத் தொழுகைக்கு, நான் வழக்கமாகச் சென்றுவரும் திருவல்லிக்கேணி தஸ்தகீர் தர்காவுக்கு சென்றிருந்தேன். தொழுது முடித்ததும் அருகிலிருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்வது சகோதரத்துவம். அருகிலிருப்பவர் என் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கி, வாழ்த்துகள் சொல்லிவிட்டு “ நான் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்படங்களுக்கு இசையமைக்கிறேன்” என்று எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கோ அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அப்போது காதல்தேசம் திரைப்படம் வெளியாகி, புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தார். உங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்றதும் “நான், கணிப்பொறியாளன், மல்டி மீடியா படித்திருக்கிறேன்” என்றேன். உடனே அவர் “ எனது ஸ்டூடியோவில் வந்து என்னைச் சந்தியுங்கள்” என்றார். அவரது தொலைபேசி எண்ணை முன்பின் தெரியாத என்னிடம் கொடுத்தார். இப்படித்தான் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது.
1996 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகையின் காலைத் தொழுகைக்கு, நான் வழக்கமாகச் சென்றுவரும் திருவல்லிக்கேணி தஸ்தகீர் தர்காவுக்கு சென்றிருந்தேன். தொழுது முடித்ததும் அருகிலிருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்வது சகோதரத்துவம். அருகிலிருப்பவர் என் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கி, வாழ்த்துகள் சொல்லிவிட்டு “ நான் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்படங்களுக்கு இசையமைக்கிறேன்” என்று எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கோ அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அப்போது காதல்தேசம் திரைப்படம் வெளியாகி, புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தார். உங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்றதும் “நான், கணிப்பொறியாளன், மல்டி மீடியா படித்திருக்கிறேன்” என்றேன். உடனே அவர் “ எனது ஸ்டூடியோவில் வந்து என்னைச் சந்தியுங்கள்” என்றார். அவரது தொலைபேசி எண்ணை முன்பின் தெரியாத என்னிடம் கொடுத்தார். இப்படித்தான் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது.
பிறகு கணினி இசையில் ’சவுண்ட் டிசைன்’ என்பதை அடிப்படையிலிருந்து அவரிடம்
கற்றுக்கொண்டேன். ஒரு பாடலில் இடம்பெறும் ஒலிகளை டிசைன் செய்வதிலும்,
அவற்றை சரியாக அடுக்குவதிலும் ஒரு ’சவுண்ட் டிசைனரும்’ படைப்பாளியாகிறான்.
நூற்றுக்கணக்கான இசைத்துவம் மிக்க இரவுகளில், ரஹ்மானின் அருகில் அவரது ஒரே
ஒலியாளனாக இருந்த நாட்கள்தான் என்னை உருவாக்கின.
சவுண்ட் டிசைன் என்பதை விளக்க முடியுமா?
சுருக்கமாகச் சொல்வதென்றால் உலகில் பிரபலமான அத்தனை வாத்தியங்களின்
அடிப்படை ஒலிகள், இசைக்கலைஞர்களால் வாசிக்கப்பட்டு, அவை கணினி
மென்பொருட்களில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும்
மாதிரி ஒலிகளைத்தான் நாங்கள் ’சாம்பிளர்ஸ்’ என்று சொல்கிறோம். இந்தமாதிரி
ஒலிகளைக் கொண்டு, ஒரு புதுமையான ஒலியை எப்படி நீங்கள் உருவாக்குகிறீர்கள்
என்பதில்தான் சவுண்ட் டிசைன் என்பதன் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. இந்த
ஒலிகள் மூலம், எந்த வாத்தியத்தையும், எந்தமாதிரியும், நீங்கள் கீபோர்டிலேயே
வாசித்துவிட முடியும். மாதிரி ஒலிகளை தட்டி, ஒட்டி, அதை எப்படி புதுமையாக,
காதுகளை கீறாத இசையாக வடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள்
கற்பனைமூலம் ஒரு ராகத்தை, அல்லது மெட்டை உருவாக்குவதை இதனோடு போட்டு
குழப்பிக்கொள்ளக் கூடாது.
உங்களது முதல் படம் கிராமியக் கதையோட்டத்துடன் இருந்ததால், தொடர்ந்து அதைப்போன்ற படங்களுக்கே இசையமைத்து வருகிறீர்களே?
பாரதிராஜா சாரே என்னை கிராமத்து இசையின் விற்பன்னர் என்று எண்ணி அவரது ’
தெற்கத்தி சீமையிலே ’ தொடருக்கு இசையமைக்க வைத்து விட்டார். நான் கிராம
வாழ்க்கையிலிருந்து வந்தவன். கிராமத்து இசையை தருவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் மேற்கத்திய கணினி இசையின் நவீனத்தை, பாரம்பரிய இந்திய இசை
வடிவங்களின் பாதிப்புடன், அதில் சூஃபி இசையின் ஒரு வடிவமான ’காவ்வாலியை’
கலந்து கொடுக்க வேண்டும் என்ற ஆவலோடுதான் திரையிசைக்கு வந்தேன். என் பலமும்
இதுவென்றே நான் நினைக்கிறேன். தற்போது நான் இசையமைத்து வரும் படங்கள் அதை
வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
சூஃபி இசை வெகுஜன ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை இல்லையா?
சூஃபி இசை ஓரளவு நமக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது வெகுஜனத் தளத்தில்
தனித்து கவனம் பெறவில்லை என்பது உண்மை. இசை வெறும் பொழுதுபோக்கு மட்டுமே
அல்ல. அது நம்மை சக மனிதனோடு அன்பு பாராட்டவும், கடவுளோடு தொடர்புகொள்ள ஒரு
கருவியாகவும் இருக்கிறது. உண்மையில் இசையின் உண்மையான ரகசியமென்பதே
இதுதான். இஸ்லாமிய மார்க்கம் தந்த இசையான சூஃபி சகோதரத்துவத்தின் அடையாளம்.
சூஃபித் துறவிகளிடமிருந்து பிறந்த இசை இது. இவர்கள் இறைவனின் காதலிகளாக
தங்களை கருதுகிறார்கள். எல்லாவற்றிலும் இறைவனையே காண்பவர்கள். எல்லா
செயலிலும் இறைவனோடு கலக்க விரும்புகிறவர்கள். அந்த அனுபவத்தை தங்களுக்குள்
கொண்டு வருவதற்காகவும், தன்னிலை மறந்து இறைவனிடம் ஒன்றிவிடும் அனுபவத்தைப்
பெறவும், அவனிடம் காதலால் கசிந்து கண்ணீர் மல்கி கரைந்து போகவும் இசையை ஒரு
சாதனமாக உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமல்ல இது ஏறக்குறைய இந்துமதத்தின்
அத்வைதத்திற்கு நெருக்கமானது என்று சொன்னால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
கர்நாடக இசை எப்படி இறைவனை அடைவதையே தனது ஆதார நோக்கமாக கொண்டதோ
அதேபோல்தான் சூஃபி இசையும்!
சூஃபி இசை பரவிய இடமெல்லாம், அங்கிருக்கும் கலாச்சார இசைகளின் தாக்கங்களை
பெற்று வளர்ந்து செழித்திருக்கிறது. இந்தியா நெடுகிலும் எளிய வாழ்க்கை
கொண்ட பக்கீர்கள் சூஃபி இசையை எடுத்து போய் மக்களிடம்
சேர்த்திருக்கிறார்கள்.
இவர்களை ஒன்றுதிரட்டி, அடுத்த மாதம் கும்பகோணத்தில் 14,15,16 தேதிகளில்
இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தும் மாநாட்டின் இறுதிநாளில் தமிழகத்தின்
முதல் சூஃபி இசை நிகழ்வை நடத்த இருக்கிறேன்.
திரையிசை வழியே சூஃபி இசை கவனம் பெற்றிருக்கிறதா?
இசைப்புயல் ரஹ்மான் இசையமைத்த 60 சதவிகித பாடல்கள் சூஃபியின் ஆன்மாவை
கொண்டவைதான். ரஹ்மான் சூஃபியை திரையில் வெகுஜனப்படுத்தியது ஒருவிதம்
என்றால் நாகூர் ஹனிபா வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தது வேறொரு ரகம். நுஸ்ரத்
ஃபதே அலிகானை ஆசிய சூஃபியின் உச்சம் என்று சொல்லவேண்டும். இங்கே சூஃபி
ராகங்களுக்கான பாடல்களை எழுதியவர்களையும் நாம் நினைவு கூர வேண்டிய நேரம்
இது. குணங்குடி மஸ்தான், தச்சுப்பிள்ளை அம்மாள், தக்கலை பீர்முகமது என்று
நீளும் பெரிய பட்டியல் அது.
சூஃபியில் அமைந்த ரஹ்மானின் சில பாடல்களைக் கூறமுடியுமா?
ஏ ஆர் ரஹ்மானின் டெல்லி 6 இல் வரும் அர்ஜியான் (Arziyan), ராக் ஸ்டாரில்
வரும் யானுசாமுதே, ஜோடா அக்பரில் வரும் க்வாஜாஜி, இன் லம்ஹோன், போஸ்
படத்தில் வரும் அல்லாஹூ, குரு திரைப்படத்தில் வரும் ஆருயிரே, மன்னிப்பாயா
மன்னிப்பாயா போன்ற பாடல்கள் இந்திய சூஃபி இசையின் தாக்கதில் உருவானவைதான்.
இன்னொரு ஆச்சரியத் தகவல் சொல்லட்டுமா? இசைஞானி இளையராஜாவின் இசையிலும்
சூஃபி புகுந்து வந்திருக்கிறது. அன்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம்
சூஃபி இசை வழிந்தோடும். tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக