அந்த நியமனத்தை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சார்பில் தனித் தனி மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை: அவற்றை, நீதிபதிகள் பி.எஸ். சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே அடங்கிய "பெஞ்ச்' கடந்த ஆண்டு, நவ., 26ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஜெயலலிதா தலைமையில் தீட்சிதர்களின் ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதால் இந்த வெற்றி பெரிய விஷயமில்லை.
தமிழக அரசு சார்பில், செயல் அலுவலர் நியமனம் சரியே என, வாதம் செய்யப்பட்டது. விசாரணை, கடந்த ஆண்டு டிச., 5ம் தேதி முடிவடைந்தது. அதையடுத்து, தீர்ப்பை, ஜனவரி மாதத்திற்கு, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.அதன்படி, நேற்று, அந்த வழக்கில், நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
என்ன தீர்ப்பு?தீர்ப்பின் சாராம்சம்: *கடந்த 1951ம் ஆண்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி, பொது தீட்சிதர்கள், மத சீர்மரபினர் (ரிலீஜியஸ் டினாமினேஷன்) என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. *மத சீர்மரபினருக்கு, அரசியல் சாசனப் பிரிவு, 26ன் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு, பொது தீட்சிதர்களுக்கும் பொருந்தும். அதனால், அவர்களே, சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்கலாம்.
*நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நூற்றாண்டுகளாக, அவர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. *தமிழக அரசின், செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.
அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், நடராஜர் கோவில் வராது. *ஒரு கோவில் அல்லது அறக்கட்டளையில் ஏற்படும் சிறிய அல்லது மிகச் சிறிய நிர்வாகத் தவறுகளை, அரசு, சீர் செய்ய வேண்டுமே தவிர, அவற்றை தனது நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொள்ள முடியாது.
அதேநேரம் சீர் செய்தல் என்ற பெயரில், அடிப்படை உரிமைகளை அரசு பறித்து விட முடியாது. இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 1951ல் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை, மீண்டும் மறு விசாரணை செய்வதற்கு, சென்னை ஐகோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை என்றும், அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பக்தர்கள் விருப்பம் நிறைவேறியது: தீர்ப்பு வெளியான தகவல் அறிந்ததும், சிதம்பரத்தில், தீட்சிதர்கள், வெடி வெடித்து கொண்டாடினர். பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலர் காசிராஜ தீட்சிதர் கூறுகையில், ""நாங்கள் நடராஜருக்கு செய்த உண்மையான பூஜைக்கு, அவர் எங்களுக்கு கொடுத்த பரிசு, இந்த தீர்ப்பு,'' என்றார். பொது தீட்சிதர்கள் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேச தீட்சிதர் கூறுகையில், ""தமிழகத்தின் கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பத்தை தான் சுப்ரீம் கோர்ட் நிறைவேற்றியுள்ளது.
தீர்ப்பு வெளியானது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,'' என்றார். இதுகுறித்து, அறநிலையத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்து விட் டனர். தீட்சிதர்கள் கொண்டாட்டம்: "சிதம்பரம் நடராஜர் கோவிலை, நிர்வகிக்க செயல் அலுவலர் நியமித்தது சரி' என, 2009ல், சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, கோவிலில், ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தீட்சிதர்கள், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.இவ் வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தும், செயல் அதிகாரி செயல்படவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டது.தீர்ப்பு வெளியானதையடுத்து, தீட்சிதர்கள் கோவில் உள்ளே, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர், கீழ வீதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்டோர், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 60 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் கோவில் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: *அரசியல் சாசன பிரிவு, 26 வழங்கும் அடிப்படை உரிமைகளை, தமிழக அறநிலையத் துறை சட்டப் பிரிவு, 107ம் உறுதி செய்கிறது. அவற்றை மறுக்கவோ, விதிவிலக்கு அளிக்கவோ முடியாது. *அறநிலையத் துறை சட்டத்தில், செயல் அலுவலரை நியமனம் செய்யும், பிரிவு, 45, எந்த சூழலில் நியமனம் செய்ய வேண்டும் என, குறிப்பிடவில்லை. அதனால் அந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி, செயல் அலுவலரை நியமிக்க முடியாது. *ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான், செயல் அலுவலரை நியமிக்க முடியும். காலவரையறையின்றி, நியமிக்க முடியாது.
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், எந்த சூழலில், என்ன காரணத்திற்காக செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார் என,குறிப்பிடப்படவில்லை. அதனாலும் அந்த நியமனம் சட்டப்படி செல்லாது. *சுற்றி வளைத்து ஏதாவது ஒரு காரணம் சொல் லியும், கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
*அப்படியே, நிர்வாகத் தவறுக்காக, கோவில் நிர்வாகத்தை அரசு கையில் எடுத்துக் கொண்டால், அந்த தவறை திருத்திய உடனேயே, மீண்டும், நிர்வாகத்தை திரும்பக் கொடுத்து விட வேண்டும்.
*அதை மீறி, அரசே தொடர்ந்து கோவிலை நிர்வகிப்பது, அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது. *அரசு, கோவில் நிர்வாகத்தை நிரந்தரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. நிர்வாகத் தவறுகளை சரி செய்ய மட்டுமே, அரசு எடுத்துக் கொள்ளலாம். காலம் குறிப்பிடப்படாமல், நிர்வாகத்தை அரசு வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. *சிதம்பரம் நடராஜர் கோவிலை, பொது தீட்சிதர்கள் கட்டியிருக்கா விட்டாலும், அது அவர்களது சொந்த சொத்தாக இல்லாவிட்டாலும், பல நூற்றாண்டுகளாக, அதை அவர்கள் நிர்வகித்ததால், அவர்களை வெளியேற்ற முடியாது.
இதை மறுபரிசீலனை செய்வது என்ற பேச்சிற்கே இடமில்லை. *மாநில அரசு, கோவிலில் நடக்கும் வழிபாடு விஷயங்களில் தலையிடுவதற்கு, அறநிலையத் துறை சட்டத்தில் இடமில்லை. முன்தீர்ப்பு தடை என்றால் என்ன? *ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியான பின், பாதிக்கப்பட்டவர், மேல் முறையீடு செய்யலாம். *மேல் முறையீடு செய்யாவிட்டால், செய்ய முடியாவிட்டால், வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதித் தீர்ப்பு. *அந்த இறுதித் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டதை, மீண்டும் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு, தடை உள்ளது. இது சர்வதேச அளவிலும் பின்பற்றப்படுகிறது. இது முன்தீர்ப்பு தடை எனப்படும். *கடந்த, 1951ல், பொது தீட்சிதர்கள், மத உட்பிரிவினர் என்று தீர்ப்பு வெளியான பின், அன்றைய தமிழக அரசு, அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
*அதை, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், தள்ளுபடி செய்தது. அதனால், 1951ல் அளிக்கப்பட்ட தீர்ப்பே, சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் இறுதித் தீர்ப்பாகக் கருதப்படும் என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சிதம்பரம் என்றால் என்ன? *சைவ சமயத்தில், கோவில் என்றால் அது சிதம்பரம் தான்.
*சிதம்பரம் என்ற பெயர், பழைய இலக்கியங்களில், தில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதுமே, தில்லை என்ற மரங்களால் ஆன காடாக இருந்ததால், அந்த பெயர் வந்தது. *முதன் முதலாக, திருமூலர் தன் திருமந்திரத்தில், சிதம்பரம் என்ற தலத்தை குறிப்பிடுகிறார். *கி.பி., 500களில், வங்கதேசத்தைச் சேர்ந்த, ஹிரண்ய வர்மன் என்ற அரசன் தான், முதன் முதலில், சிதம்பரம் நடராஜர் கருவறைக்கு, பொன் தகடு வேய்ந்தான். *அவனை அடுத்து, பராந்தகன், ஆதித்த கரிகாலன் என, தொடர்ந்து சோழப் பேரரசர்கள், பொன் வேய்ந்தனர். *ராஜராஜ சோழன் காலம் முதல், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள், அந்த கோவிலில் உள்ளன. *கி.பி., 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய, சமயக்குரவர் நான்கு பேராலும், பாடல் பெற்ற தலம். *பன்னிரு திருமுறை, திவ்யபிரபந்தம் உட்பட, அனைத்து இலக்கியங்களிலும், சிதம்பரம் நடராஜரை, தில்லை மூவாயிரவர் எனப்படும், மூன்றாயிரம் அந்தணர்கள் வழிபடுவது குறிப்பிடப்பட்டுள்ளது. *மூன்றாயிரம் அந்தணர்களில் முதல் நபர், சிதம்பரம் நடராஜர் தான். அதனால்,இன்றும், பொது தீட்சிதர்கள் சபைக்கு, தலைவர் நடராஜர் தான். இந்த வழக்கில், முதல் வாதியும், அவர் தான். *ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த கோவிலில், தீட்சிதர்கள் வழிபட்டு வருவதைக் கருத்தில் கொண்டு தான், அது அவர்களது சிறப்பு உரிமை என, சுப்ரீம் கோர்ட் தன் தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. மத உட்பிரிவினர் பற்றி சுப்ரீம் கோர்ட் சொல்வது என்ன? ஒவ்வொரு மதத்திலும் உள்ள ஒரு குழுவினர், தங்களுக்கான மத நம்பிக்கையுடனும், ஒரு தனிப் பெயர் மற்றும் அமைப்புடன் விளங்கினால், அவர்கள் மத உட்பிரிவினர் (ரிலிஜியஸ் டினாமினேஷன்) என, சுப்ரீம் கோர்ட், 1954ல் விளக்கம் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 26ல், பொது நன்மைக்கு உட்பட்டு, ஒவ்வொரு மத உட்பிரிவினரும் அல்லது அதன் உட்பிரிவும் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற்றுள்ளனர். *அவர்கள், மத நிறுவனங்களை நிறுவி, அவற்றை பராமரிக்கலாம். *அவர்களது மத சம்பந்தமான விஷயங்களில், அவர் களே முடிவெடுக்கலாம். *சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம் அல்லது பெற்றுக் கொள்ளலாம். *அத்தகைய சொத்துக்களை, சட்டப்படி நிர்வகிக்கலாம். மற்ற மாநிலங்களில்...: *தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும், புதுச்சேரியிலும், பெரும்பாலான கோவில்கள், அந்தந்த அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. *கர்நாடகாவில், அந்த மாநில அறநிலையத் துறை சட்டம், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என, 2006ல் கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அதையடுத்து, அன்றைய கர்நாடக அரசு, கோவில்களை, இந்துக்களே நிர்வகிக்கும் வகையில், சட்டத்தை மாற்றியமைப்பதாக, சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்து, ஐகோர்ட் உத்தரவிற்கு தடை உத்தரவு பெற்றது. இன்று வரை, புதிய சட்டம் அமலுக்கு வரவில்லை. *தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி அறநிலையத் துறை சட்டங்கள், இந்துக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன உரிமைகளுக்கு விரோதமானவை எனக் கூறி, ஆனைக்கட்டி மடம், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுப்ரீம் கோர்ட்டில், 2012, டிசம்பரில் வழக்கு தொடுத்தார். *மூன்று வாரங்களில் பதிலளிப்பதாகக் கூறிய, தமிழக அரசு இன்று வரை பதிலளிக்கவில்லை; ஆந்திர, புதுச்சேரி அரசுகளும் பதிலளிக்கவில்லை. நமது நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக