Bangalore: Raids Find IAS Officer, Govt Officials Owning Huge Wealth
சொத்து குவிப்பு புகார் எதிரொலி கர்நாடக அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு கட்டு கட்டாக பணம், நகைகள் சிக்கியது< பெங்களூர்:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்துள்ளதாக வந்த புகார்களையடுத்து பெங்களூரில் உள்ள அரசு உயரதிகாரிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கட்டுகட்டாக பணம் மற்றும் தங்க, வெள்ளி நகைகள், பங்கு பத்திரங்கள், வீட்டுமனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசில் பணியாற்றிவரும் உயர் அதிகாரிகள் சிலர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருப்பதாகவும், திட்டங்களை நிறைவேற்றுவதில் ஊழல் செய்து கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர் என்றும் லோக் அயுக்தாவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.இந்த புகார்களை ஆய்வு செய்த கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார், குறிப்பிட்ட அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு நடத்த திட்டமிட்டனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் பல குழுக்களாக பிரிந்து பெங்களூர், குல்பர்கா மற்றும் ஏதகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் சிலரது வீடுகளுக்கு இன்று அதிகாலை சென்றனர். வீடுகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல வெளியில் இருந்தும் யாரும் வீட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை போலீசார் வாங்கி வைத்துக் கொண்டனர்.
பெங்களூரில் வசிக்கும் கர்நாடக தோல் தொழில்நுட்ப வாரிய இயக்குனர் சிக்கண்ணாவுக்கு சொந்தமான 2 வீடுகள் மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. வீடுகளில் இருந்து ரொக்க பணம் மற்றும் தங்க, வெள்ளி நகைகள், வீட்டு மனை பத்திரங்கள், பங்கு பத்திர ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல, ஏதகிரியில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி சிவசரணப்பா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் சிக்கியது. ஏராளமான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். குல்பர்காவில் உள்ள கிராம ஊரக துறை செயற்பொறியாளர் பண்டப்பா அலில் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் நகைகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். சாலை போடும் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களையும் அலில் வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டுகள் மார்ட்டின், நாராயணசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ஆபரணங்கள், ரொக்க பணம் மற்றும் சொத்துகளுக்கான ஆவணங்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சோதனை முடிந்த பிறகே அதுபற்றிய முழு விவரம் வெளியிடப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். உயரதிகாரிகள் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியது, கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. tamilmurasu.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக