திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மகாராஷ்டிரா: மாந்திரீகம் பில்லி சூனியம் சாமியாடுதல் தடை! அரசு அவசர சட்டம் !

இது போன்ற சட்டம் இந்திய முழுமைக்கும் கொண்டு வரவேண்டும்
மும்பை : மகாராஷ்டிராவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் இதர மூட பழக்க வழக்கங்களை தடுக்க, அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மந்திர, தந்திர வேலைகள் மற்றும் பில்லி, சூனியங்களில் ஈடுபடுவோருக்கு, இந்தச் சட்டப்படி, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.புனேயை சேர்ந்த சமூக ஆர்வலர், நரேந்திர தபோல்கர், 68. "மகாராஷ்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி' என்ற அமைப்பை நிறுவி, மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தார். மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் மாயாஜால வித்தைகள் மூலம் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக, அரசு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வந்தார். இந்நிலையில், 20ம் தேதி, தபோல்கர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற நபர்கள், இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, தபோல்கர் படுகொலைக்கு எதிராக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்கள், "மாந்திரீகம் மற்றும் பில்லி, சூனியத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்' என்றும், கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இதுதொடர்பான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் சங்கர நாராயணனும் ஒப்புதல் அளித்தார். மாந்திரீகம், பில்லி, சூனியம் மற்றும் மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக, நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா வில்தான், அவசர சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின்படி, நரபலி, பில்லி, சூனியம் மற்றும் மந்திர, தந்திர வேலைகளில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை: