ஒரு
மணி நேரமாக ஆட்டம் காட்டிய திருடர் ஒருவரை சினிமா திரைப்பட ஸ்டன்ட்
காட்சிகளை நடத்தி மடக்கி பிடித்துள்ளனர் பொதுமக்கள். எடிட்டிங் செய்யாத
இந்த ரியல் சேசிங் மற்றும் ஸ்டன்ட், பெருத்த விவாதங்களையும்
உருவாக்கியுள்ளது. தவறு செய்தவரை பிடித்து தருவது சரி தான். ஆனால்
அதற்காக அவர்கள் நடந்துகொண்ட விதம் சரியா? தவறா? வாசகர்களே தங்கள்
கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்ற கோரிக்கையோடு செய்திக்குள் செல்லலாம்.<
‘சேலம்
செவ்வாய்பேட்டை பால் மார்கெட் பகுதியில் ரெயில்வே ட்ராக்கை ஒட்டி
குடியிருப்புகள் இருக்க பொதுமக்கள் கூச்சலிட்டபடியும் சிலர் பரபரப்பாக
ஓடியபடியும் இருந்தனர். வெறும் டிராயர் மட்டும் போட்டுருந்த ஒரு இளைஞன்
மாடி மாடியாக தாவி வர அங்கிருந்த பொதுமக்களிடம் பேசினோம்.
“பெங்களூர்-
காரைக்கால் ட்ரைன் சேலம் ஜங்சனில் இருந்து கிளம்பி மெதுவாக
செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் வழியாக வந்தது. அப்போ சுகுணா என்ற ஓசூரை
சேர்ந்த நர்சான ஒரு பயணியின் கழுத்தில் இருந்து மூனரை பவுன் தங்க
சங்கிலியை ஒருத்தன் பறிச்சுக்கிட்டு ஓடினான். அவனை அங்கேயே பயணிகள்
பிடித்து தங்க சங்கிலியை மீட்டனர். ஆனா அந்த திருடன் அங்கிருந்து
தப்பிச்சு,ரெயில்வே ட்ராக்கை தாண்டி வீடுகள் இருக்குற இந்த பக்கம்
வந்துட்டான். எல்லோரும் சத்தம் போட ,இங்க திடுதிடுப்பென மரத்தில் ஏறி
மாடிக்கு போயிட்டான். பெண்கள் அலறி அடிச்சுகிட்டு வெளிய வந்தாங்க அப்புறம்
நடக்குறததான் நீங்களே பாக்குறீங்களே!’ என்றபடியே சுத்தி வளைங்க தப்பிச்சுட
போறான் என சத்தமிட்டபடியே அந்த க்ரூப் துரத்தியது.
திருடனோ
அங்கிருந்து மாடி மாடியாக தாவ மாடி வழியாக பொதுமக்கள் துரத்த மாடியில்
இருந்து கீழே குதிகிறான்...முதுகில் அடிபட்டாலும் ஓட,அங்கே அருகேயே இருந்த
டாஸ்மாக்கில் சரக்கு அடித்துக்கொண்டு இருந்த சில இளைஞர்கள்,இதை கண்டு
திருடனை வளைத்து பிடிக்கின்றனர்.
‘டேய்
எங்க வந்துடா திருடுற’ என்றபடியே முகத்தின் மீது ஒரு குத்து விட ரத்தம்
ஒழுகியது. கும்பல் சேர்ந்த இளைஞர்கள் சரமாரியாக அடிக்க ‘வலி தாங்காமல்
அலறிய திருடன் திமிறிக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க
முயற்சிக்கிறான். ஒரு பெரிய காம்பவுண்ட் சுவரை ஒரே ஜம்பில் பிடித்து
தாண்டி,மறுப்பக்கம் உள்ள ட்ரைன் ட்ராக்கில் ஓட ஆரம்பிக்கிறான். இன்னொரு
ட்ராக்கில் ஒரு ட்ரைன் வந்துகொண்டு உள்ளது. பொதுமக்களும் துரத்த
மோதிவிடும் தூரத்தில் ட்ரைன்....படபடப்பாக நாமும் ஓட....நல்லவேளை
ட்ரெயினில் மோதவில்லை திருடனும்,யாரும்.
மறுபக்கம்
உள்ள சுவரின் மீது ஏறி தப்பிக்க முயற்சிக்க தாவி பிடித்தனர் இளைஞர்கள்...
அவ்வளவு தான் அங்கிருந்த கல் எடுத்து திருடனின் முதுகில் விடாமல்
குத்தினர்.’ ஓஓஒ ஆஆஆ ‘ என அலறுகிறான் திருடன். ஆனாலும் விடாத இளைஞர்கள்
மிக மோசமாக திருடனை தாக்கி கயிற்றால் கால் கைகளை கட்டினர்....கற்களால்
திருடனின் முகத்தில் குத்த ரத்தம் வழிந்தது....ட்ரைன் ட்ராக்கில் செத்த
ஆட்டை தூக்கி வருவது போல அடித்து தூக்கி வந்தனர் பொதுமக்கள்.
வழக்கம்
போலவே தகவல் கிடைத்த உடன் எட்டிவிடும் தூரத்தில் உள்ள செவ்வாய்பேட்டை
காவல்நிலையத்தில் இருந்து மிக விரைவாக முக்கால் மணி நேரத்தில் வந்தனர்
போலீசார்கள்.
ஆனாலும்
‘யாரை கேட்டுப்பா இப்படி அடிச்சிங்க...’ என்றார்..(நல்ல விஷயம் தான் ஆனால்
விரைவாக வந்து இருந்தால் அடிப்பதில் இருந்து தடுத்து இருக்கலாம்) அடி
தாங்காமல் தளர்ந்து ரத்தம் வழிந்தபடி இருந்த திருடன், ‘பாணி பாணி’ என
தண்ணீர் கேட்டான். ‘டேய் .....வடநாட்டுல இருந்து வந்துகிட்டு திருட்டு
தொழில் பண்றியா?’ என்று வயிற்றிலேயே ஒரு குத்து விட்டான் ஒரு இளைஞன்.
யாரும் தண்ணீர் தராமல் இருக்க ஒரு சிறுவன் ஓடி போய் ஒரு தண்ணி பாக்கெட்
வாங்கி வந்து திருடனுக்கு தந்தான்...அதை ஓட்டை போட்டு வாய்க்குள் ஊற்றி
திருடனின் தாகத்தை தீர்த்தனர்..
‘திடீர்னு
திருடினான்னு தெரிஞ்ச இவனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்களே! கொடுத்த
வாக்குறுதிகளை காப்பாற்றாமல் நம்ம பணத்தை சுரண்டுற அரசியல்வாதிகளையோ,பெரிய
ஆளுகளையோ என்றைக்காவது நாம் இப்படி அடித்துள்ளோமா? வலியவனிடம் காட்டாத
வீரம் எளியவனிடம் மட்டும் ஏன்?’ என குமுறினர் சில ஆட்டோ
டிரைவர்களும்,ரெயில் நிலையத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களும்...
‘அதுக்காக திருடுனவன சும்மா விட்டுட முடியுமா?இப்படி நாலு சாத்து சாத்துணாதான் வேலைய காட்டமாட்டனுங்க’ என்றனர் பெண்மணிகள்.
‘அந்த திருடன் பெயர் விஸ்ணு கோஷ்- இதுமட்டும் தான் இப்போதைக்கு தெரிந்தது...’என்ற போலீசார் அவனை ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.
ஒரு
சாகசத்தை நிகழ்த்திய திருப்தியோடு அனைவரும் களைந்து போக ஆங்காங்கே திருடன்
சிந்தி,சிதறி இருந்த ரத்தம் நம்மிடம் ஏதோ சொல்வதாக இருந்தது.
‘திருடியவனுக்கு அடி என்றால் திருட்டுக்கு காரணமான ஏற்றத்தாழ்வான சமூகத்திற்கு என்ன தண்டனை?’ என்பதாக இருக்குமோ!!!!
செய்தி - படங்கள்: இளங்கோவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக