சனி, 22 செப்டம்பர், 2012

டூரிங் டாக்கீசும் அமெரிக்கன் சென்டரும் ,, Flash Back

டூரிங் டாக்கீஸ் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். கழுத்தில் தங்க செயின்,மோதிரம், உடை - ஜீன்ஸ் பேன்ட்,டி ஷர்ட் தரை டிக்கெட்டில் மணலில் உட்கார்ந்து தான் பார்ப்பேன். டூரிங் டாக்கீஸ் என்றாலே மணலில் திரை முன்னால் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பது தான் சுகம். அப்படி ஒரு முன்னூறு தடவை கல்லூரி நாட்களில், அதன் பின் கூட பல பழைய படங்கள் தத்தனேரி மாருதி, விளாங்குடி ரத்னா டூரிங் டாக்கீஸ் ரெகுலர் தரை டிக்கெட் கஸ்டமர் நான்.
ஒரே ப்ரொஜெக்டர் தான் என்பதால் மூன்று முறை இடைவேளை!
அப்படி விளாங்குடி ரத்னா தியேட்டர் ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படம் பார்க்க போயிருந்தேன்.
இந்த படம் ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான்.
பழைய படங்களில் வருகிற துணை நடிகர்கள் சாதாரணமாக மக்களுக்கு தெரியாத நடிகர்களை கூடயார் எவர் என நன்கு நான் தெரிந்து வைத்திருப்பேன். உதாரணமாக பூபதி நந்தாராம் அந்த அலிபாபா படத்தில் ஒரு துணை வில்லன். இவர் பின்னால் 'லாரி டிரைவர்' என்ற ஆனந்தன் நடித்த படத்தில் கூட துணை வில்லன். அப்போது நான் விளாங்குடி தியேட்டர் போயிருந்த போது 'இவர் உயிருடன் இல்லை. இவர் மகன் சுரேந்தர் என்பவர் 'சுதாகர் ' போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்' என்பது வரை எனக்கு தெரியும்.

தரையில் அமர்ந்து படம் பார்த்துகொண்டிருந்த போது அப்போது அறுபது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் அந்த படத்தின் காட்சிகள் பற்றி விளக்க ஆரம்பித்தார்.
 சாதாரணமா ' சும்மா பேசாம படத்தை பாரு பெருசு. நாங்க பார்த்த படம் தான். எங்களுக்கே கதை சொல்றியா போய்யா ' என்று தான் மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் அந்த பெரியவரை கனப்படுத்த விரும்பி விட்டேன்.

 தங்கவேலு வரும்போது பாமரன் போல ' இவன் நம்பியாரா ' என்பேன் . அவர் குஷியாகி விட்டார் . 'இல்லே. இவன் சிரிப்பு நடிகர் தங்கவேலு ' என்று எனக்கு அறிவுறுத்தினார்.

வீரப்பாவை வரும்போது ' இந்த ஆள் யார் ' என்பேன். அவர் புளகாங்கிதமாக ' இவனை தெரியாதா. வில்லன் வீரப்பா. நீ வஞ்சிகோட்டை வாலிபன் பார்த்ததில்லையா ? நாடோடி மன்னன் பார்த்ததில்லையா ?' மடையனை பார்ப்பது போல என்னை கேட்டார்.

வீரப்பாவுக்கும் எம்ஜியாருக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும்  பதட்டத்துடன் ' எம்ஜியார் செத்துடுவாரா ?அயோக்கியன் எம்ஜியாரை கத்தியால குத்திடுவானா ' என அவரிடம் என் சந்தேகத்தை கேட்டுக்கொண்டே தான் இருந்தேன்.
அவர் ' எம்ஜியார் எப்பவுமே சாக மாட்டார். கடைசியா வில்லனை கொன்று விடுவார். கவலைபடாதே . பேசாம படத்தை பார் ' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கதையை முன்னதாக சொல்லிகொண்டிருந்தார்.

பானுமதியை 'யார் ஜெயலலிதாவா இது ?' -நான் அவரை வினவினேன். அவர் ரொம்ப குஷியாகி எனக்கு பல பாலபாடங்கள் சொல்ல ஆரம்பித்தார்.

சக்ரபாணி எம்ஜியாரின் கூட பிறந்த அண்ணன் என அவர் சொன்ன போது நான் 'அப்படியா கூட பிறந்த அண்ணனே படத்திலும் அண்ணனா வர்றாரே!' என அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு கதை சொன்ன பெரியவருக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்து விட்டேன்.

என் கூட வந்த நண்பர்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.
நான் ' காரியத்தை கெடுத்து விடாதீர்கள் . அவருக்கு இந்த சந்தோசம் தருவது இன்று என் கடமை ' என்று எச்சரிக்க வேண்டியிருந்தது.

க்ளைமாக்ஸில் ' எம்ஜியார் செத்துடுவாரா ' என்று மீண்டும் பதற ஆரம்பித்தேன். ' சாக மாட்டார். இப்ப வேடிக்கையை பாரு. வீரப்பா ஆள் காலி! ' பெரியவர் தேறுதல் சொன்னார்.

படம் முடிந்தவுடன் விளக்கை போட்டவுடன் பெருமையாக என்னை பார்த்தார். அவர் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தயாரித்து இயக்கியவர் போல அவர் முகத்தில் பெருமிதம்! " நான் இல்லையின்னா உனக்கு இன்னைக்கு இந்த படம் தலையும் புரிந்திருக்காது. வால் கூட தெரிஞ்சிருக்காது."
வெளியே வரும்போது சொன்னார் " பழைய படம் நிறைய பார்த்தேன்னா புது படங்களே பார்க்க மாட்ட "

அதற்கு மறு நாள் சென்னை சென்றேன்.
அமெரிக்கன் சென்டெரில்  ஹாலிவுட் நடிகை கோல்டி ஹான் நடித்த  Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் இரண்டாம் நாள் பார்க்க கிடைத்தது. அந்த படத்தையும் என்னால் இன்று வரை மறக்க முடியாது. ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து The Sugarland Expressபடத்தை பார்த்தார் என்பதால்.

அவர் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு நூறு தடவையாவது பாடியிருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரிமரத்தடி ,வைகையாற்று மணல் , பூங்காக்கள்இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை சிலநூறு தடவை பாடியுள்ளேன். இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது என நண்பர்களும் உறவினர்களும் இன்று கூட சொல்கிறார்கள்.

பி பி ஸ்ரீநிவாஸ்பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போதுபுன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார்.
படம் பார்க்கும்போது அவர் என்னிடம் அதிகம் பேசவில்லை.The Sugarland Express படத்தை பார்ப்பதில் இருவருமே ஒன்றி போய்விட்டோம் என்பது தான் உண்மை http://rprajanayahem.blogspot.com/

கருத்துகள் இல்லை: