புதன், 19 செப்டம்பர், 2012

நொந்துபோன அழகிரி: “உங்க கையால தளபதிக்கு ஒரு லெட்டர் தாங்கண்ணே”

Viruvirupu
மதுரை தி.மு.க.-வில் ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால், அழகிரியை பிடித்தால் சரி என்ற காலம் மலையேறி விட்டதா என்ற கேள்வி, மதுரை தி.மு.க.வினரிடம் எழுந்துள்ளது. காரணம், தி.மு.க. இளைஞரணியில், மதுரையை சேர்ந்த 4 பேருக்கு பொறுப்புகள் வழங்க கோரி, பொருளாளர் ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் அழகிரி நேரடியாக பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.
தமது ஆதரவாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமானால், அழகிரி முன்பு நேரடியாக கருணாநிதியிடம் பேசியே சாதித்துக் கொள்வார். ஆனால், சமீப காலங்களில் பாதை அவ்வளவு ஸ்மூத்தாக இல்லை.

இளைஞரணி நேர்காணல் தொடர்பாக, மதுரையில் ஸ்டாலின் பங்கேற்றபோது அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதனால், 17 பேருக்கு கட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதை ரத்து செய்வதற்கே அழகிரி பாடு பெரும் பாடாகப் போனது. அதேபோல், மதுரையில் குஷ்பு பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்காத அழகிரி ஆதரவாளர், 12 பேருக்கு, மீண்டும் நோட்டீஸ் வந்து சேர்ந்தது.
இது தவிர சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இரு தரப்பினருக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது. அதையடுத்து, அண்ணாத்துரை பிறந்த நாள் நிகழ்ச்சியிலும், இரு பிரிவாக சென்று மாலை அணிவித்தனர்.
இப்போது மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களே, கட்சிப் பதவிகளுக்காக அழகிரியிடம் நேரடியாக, “அண்ணே… தளபதிக்கு (ஸ்டாலின்) ஒரு சிபாரிசு கடிதம் குடுங்கண்ணே…” என்று கேட்டதில் ரொம்பத்தான் நொந்து போனாராம் அழகிரி. எதுவும் பேசாமல், சிபாரிசு கடிதங்களை எழுதிக் கொடுத்தும் விட்டாராம்”
“நீங்க கேட்டதற்காக கடிதம் கொடுக்கிறேன். அப்புறம் அவர் கடிதத்தை மதிக்காமல் தூக்கி எறிந்து விட்டார் என்று சொல்லிக்கொண்டு இங்கே வந்து நிற்கக்கூடாது” என்று கூறிவிட்டுத்தான் கடிதங்களை கொடுத்தாராம்!
மதுரை நகர் இளைஞரணியில், அமைப்பாளர் பதவியை முபாரக் மந்திரிக்கும், துணை அமைப்பாளர் பதவியை பாலாஜி, முத்து, அன்பு நிதி ஆகிய மூவருக்கும் வழங்க, பொருளாளர் ஸ்டாலினுக்கு, அழகிரி பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். இவர்கள் நால்வருக்கும் அழகிரி கையொப்பத்துடன், தனித்தனியே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிபாரிசு கடிதங்களுக்கு என்ன ஆகப் போகிறதோ!

கருத்துகள் இல்லை: