சனி, 22 செப்டம்பர், 2012

இலங்கை அதிபர் ராஜபக்ஷே:பிற மதத்தவரிடம் வெறுப்பு காட்டக்கூடாது:

சாஞ்சி:""பிற மதத்தவரிடம் பகைமை, வெறுப்பை காட்டினால், அது, வன்முறையில் முடிந்து விடும்; இப்போக்கை கைவிட்டு, எல்லாரும் சகிப்புத் தன்மையுடன் இருப்பது, அமைதிக்கு வழி ஏற்படுத்தும்,'' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறினார்.
அவரது வருகையைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, கைதாகி பின், விடுதலை செய்யப்பட்டார்.மத்திய பிரதேச மாநிலம், சாஞ்சி நகரில், சாஞ்சி பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், நேற்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:
பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், கலந்து கொண்டு பேசும் இந்நாளில், சகிப்புத் தன்மையை வலியுறுத்துவது, பொருத்தமான செய்தியாக இருக்கும் என, கருதுகிறேன். மற்ற மதங்களின் மீது, வெறுப்பையும், பகைமை உணர்வையும் காட்டும் போது, வன்முறை ஏற்பட்டு சமூகத்துக்கு பேரழிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதற்கு தக்க தீர்வு, சகிப்புத் தன்மையை காட்டுவதே. இந்த செய்தி, கிழக்கு, மேற்கு நாடுகளுக்குப் பொதுவானது.மாபெரும் மனிதரான, மகாத்மா காந்தியை யாராலும் மறக்க இயலாது. பொருள் தேடும் உலகில், அன்பு, அமைதி, பாசம் மற்றும் அகிம்சை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இந்தியாவில், புத்த மதச் சிந்தனைக்கு, புத்துயிர் கொடுத்தவர், டாக்டர் அம்பேத்கர். அவரது அரும்பணியால், நாட்டின் ஆட்சி முறையில், புத்த, இந்து மதங்களின் உயரிய கருத்துக்கள் புகுத்தப்பட்டன.தேவையற்ற போட்டி உணர்வை ஏற்படுத்தும், வழக்கமான கல்வி முறை மாற வேண்டும். நம்மில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்வியே, முழுமையானதாக இருக்கும்.இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

வைகோ கைதாகி விடுதலை :

இதற்கிடையே, ராஜபக்ஷே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த, 750 தொண்டர்களுடன், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மூன்று நாட்களுக்கு முன், பஸ்கள் மூலம் மத்திய பிரதேசத்துக்குள் நுழைய முயன்றார். அவரையும், அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களையும், போபால் நகரிலிருந்து, 370 கி.மீ., தொலைவில், மகாராஷ்டிரா - மத்திய பிரதேசம் எல்லை அருகே, பச்சிசோலி கிராமத்தில் போலீசார் தடுத்து, கைது செய்தனர். அங்கிருந்தபடியே, வைகோவும், தொண்டர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.ராஜபக்ஷே உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் கொண்ட, 2,000 போஸ்டர்களை தர்ணா நடந்த இடத்தில் வைத்திருந்தனர்.சாஞ்சியில் அடிக்கல் நாட்டு விழா முடிந்த பின், நேற்று மாலை, வைகோவும், அவருடன் வந்திருந்த தொண்டர்களும் விடுதலை செய்யப் பட்டனர்.

கருத்துகள் இல்லை: