திங்கள், 17 செப்டம்பர், 2012

மன்மோகன் சிங் அரசுக்கு வெளியிலிருந்து மம்தா ஆதரவு தர திட்டம்

கோல்கட்டா:டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற விஷயங்களில், மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்த மம்தா பானர்ஜி, தற்போது, தன் பிடிவாதத்தை தளர்த்தத் துவங்கியுள்ளார். மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதை விட, வெளியில் இருந்து ஆதரவு அளிக்க, அவர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சமீபத்தில், டீசல் விலையை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தியது. அத்துடன், கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவையும் எடுத்தது.தங்களை கலந்தாலோசிக்காமல், காங்கிரஸ் மேலிடம், இந்த முடிவை எடுத்ததாக, ஐ.மு.கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, "டீசல் விலை உயர்வையும், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையும், 72 மணி நேரத்தில், வாபஸ் பெறாவிட்டால், அரசில் இருந்து வெளியேறுவோம்' என, கெடு விதித்தார்.இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த, பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா, ""மத்திய அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல. அதேபோல், கூட்டணியை முறிக்கும் எண்ணமும் இல்லை. ஆனால், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.
இதுகுறித்து, திரிணமுல் காங்., வட்டாரங்கள் கூறியதாவது:தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்வது, கட்சியின் எதிர்காலத்துக்கு சரியாக இருக்காது என, மம்தா கருதுகிறார். இதனால், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெற தயங்குகிறார். அதேநேரத்தில், சாதாரண மக்களின் பிரதிநிதியாக, தன்னை அடையாளம் காட்ட வேண்டும் என்றும், கருதுகிறார்.எனவே, டீசல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால், மத்திய அமைச்சரவையில் இருந்து, வெளியேற திட்டமிட்டுள்ளார்.
அதேநேரத்தில், மத்திய அரசுக்கு, வெளியில் இருந்து, தொடர்ந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி, ஆலோசிப்பதற்காக, நாளை கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதில், ஆலோசிக்கப்படும் விஷயங்களின் அடிப்படையில், முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, திரிணமுல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதரவை வாபஸ் பெறஉத்தவ் வேண்டுகோள்:

""மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் வாபஸ் பெற வேண்டும்,'' என, சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.டீசல் விலை உயர்வை கண்டித்து, மும்பையில் நேற்று, சிவசேனா கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய, உத்தவ் தாக்கரே, மேலும் கூறுகையில், ""மத்திய அரசுக்கு மிரட்டல் விடுப்பதை மம்தா பானர்ஜி கைவிட்டு, அதற்குப் பதிலாக ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அதேபோல், பவாரும், முலாயம் சிங்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: