சனி, 22 செப்டம்பர், 2012

Vodafon க்காக 400 திருக்குறளுக்கு இசையமைத்த சரவணா கலைமணி!

young musician composes 400 couplet தொலைக்காட்சி,வானொலிகளில் எத்தனையோ விளம்பரங்கள் வருகின்றன. சில நம்மையறியாமல் நமக்குப் பிடித்து விடும். அவை வரும்போது ரிமோட்டை மறந்துவிட்டு ரசிப்போம்.

இப்படி ரசிக்கப்படும் விளம்பரங்களின் பின்னனியில் இருப்பவரை யாருக்கும் தெரியாது. அப்படி அண்மைக்காலமாக அனைவரையும் ஈர்த்த சுந்தரி சில்க்ஸ்,குமரன் சில்க்ஸ்,கல்யாண் ஜூவல்லர்ஸ்,ரூபினி சன் ப்ளவர் போன்ற 400 விளம்பரங்களுக்கு மேல் இசையமைத்திருப்பவர் சரவணா கலைமணி.அனைத்து சேனல்களிலும் இவரது விளம்பர இசை ஒலித்து கொண்டிருக்கிறது. இவர் அமைதியாக அடக்கமாக இருக்கிறார்.
பிரபல விளம்பரங்களின் பின்னனியில் உள்ள சரவணா கலை மணியின் பின்னனி என்ன?

"நான் எம்.எப்.ஏ.விஸ்காம் படித்துள்ளேன். சென்னை கவின் கலைக் கல்லூரியில் முடித்தேன். அதுமட்டுமல்ல மேற்கத்திய இசையில் லண்டன் டிரினிட்டி காலேஜின் 8 கிரேடு முடித்து இசையில் பட்டம் பெற்றுள்ளேன். மேற்கத்திய இசை தவிர கர்நாடக,இந்துஸ்தானி இசையும் கற்றிருக்கிறேன்.
" நாடகங்கள், நிகழ்ச்சிகள் என்று ஆரம்பித்து குறும்படங்கள்,ஆவணப் படங்கள் என்று விரிந்தது. என் நண்பர் மூலம் ஒரு விளம்பரப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பும் வந்தது. அதன்பிறகு 300 விளம்பரங்கள் தாண்டி இசையமைத்து விட்டேன். இதில் மாநில,தேசிய அளவிலான நிறுவனங்கள் எல்லாம் அடக்கம்," என்கிறார் கலைமணி.
விளம்பரப் படங்களுக்கு ஒருபக்கம் இசை அமைத்துக் கொண்டும் இன்னொரு புறம் ஜெயாவிடிக்காக "உங்க ஏரியா உள்ள வாங்க" கேம் ஷோவுக்கும் இசையமைத்து வருகிறார். டைட்டில் பாடலையும் பாடியுள்ளார். இதே சேனலில் இன்னொரு கேம்ஷோவான "மிஸ் & மிஸஸ் " உன்வாசம் என்நேசம்" தொடர்களுக்கும் இசையமைத்தது வருகிறார். டைட்டில் பாடலும் இவரே.
தன் இசைபயணத்தில் 400 திருக்குறள்களுக்கு இசையமைத்துள்ளதை, பெருமையாகக் குறிப்பிடுகிறார். வோடபோன் நிறுவனத்திற்காக இதைச் செய்திருக்கிறார். 40 தலைப்புகளில் 400 குறள்பாக்கள் ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு மாதிரியான தன்மையில் இசையை வழங்கியிருக்கிறார். இம்முயற்சியில் வோடபோன் நிறுவனத்தின் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.
"இதை இசையமைக்கும் போது சுத்தமான கர்நாடக இசை மாதிரியும் தெரியாமல் ஒருமாதிரி கலவையான இசை வடிவத்தைக் கொடுத்திருந்தேன் இது சின்னஞ் சிறுவர்களைக் கவர்ந்திருந்தது.
அதனால் அவர்களால் எளிதில் எல்லாக் குறள்களையும் மனதில் பதிய வைக்க முடிந்தது. என்னைமாதிரி இளம் இசையமைப்பாளருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு அதுவும் ஆரம்ப நிலையிலேயே வந்த இப்படிப்பட்ட வாய்ப்பு நான் செய்த பாக்கியம். நான் பலரால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்," என்றார்.
ஏராளமான விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ள சரவணா கலைமணி. இப்போது 2 மியூசிக் வீடியோவுக்கு இசையமைத்து வருகிறார். அதுவும் ஆங்கில மொழியில் ஒன்று. இதில் ஒரு பாடலை இசையமைத்துப் பாடியும் உள்ளார். சினிமா வாய்ப்புகளும் வந்துள்ளனனவாம்!

கருத்துகள் இல்லை: