புதன், 19 செப்டம்பர், 2012

கூடங்குளம். எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தனின் பின்னணி என்ன?

நாகர்கோவில்: கூடங்குளம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கேரள எதிர்கட்சி தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், தமிழக எல்லையில் போலீசாரால் திருப்பி அனுப்பட்டார்.   (போராட்ட புகழ் உதயகுமாருக்கு மிக்க ஆதரவு கேரளத்தில் இருப்பதாக தெரிகிறது. கூடவே பூஷன்-கேஜரிவால், ஏன் கடல் கடந்து சீமையிலிருந்தும் ஆதரவு கிடைக்கிறது_)
ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க நடந்த இந்த நாடகத்துக்கு, உட்கட்சி பிரச்னைதான் அடிப்படை காரணம் என்று தெரியவந்துள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக இடிந்த கரையில் போராட்டம் நடத்தி வரும் உதயகுமார், அரசியல் கட்சி தலைவர்களை அழைத்துபேச வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் கேரள மார்க்சிஸ்ட் மூத்த தலைவரான அச்சுதானந்தனை அழைத்திருந்தார். அச்சுதானந்தன் நேற்று கூடங்குளம் வருவதாக அறிவித்தார். திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, களியக்காவிளை வழியாக கன்னியாகுமரியில் கேரள விருந்தினர் மாளிகைக்கு வந்து, அங்கிருந்து கூடங்குளம் செல்வதாக அவரது பயண திட்டம் தயாரிக்கப்பட்டது. மாநில எல்லையான களியக்காவிளையில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10.45 மணிக்கு அச்சுதானந்தனின் கார், ஊடக வாகனங்கள் புடைசூழ களியக்காவிளை வந்தது, அவரை போலீசார் தடுத்தனர். காரில் இருந்து இறங்கிய அவரிடம் கூடங்குளத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் 144 தடை உத்தரவு பற்றி குமரி மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார் விளக்கினார். இதை ஏற்றுக்கொண்ட அச்சுதானந்தன் திரும்ப செல்வதாக அறிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் செல்ல முடியாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அணுஉலை கொள்ளை உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் தனது ஆதரவை விலக்கி கொண்டு வெளியேறிது. அந்த கொள்கைக்கு எதிராகதான் அந்த கட்சியின் தொண்டனாக வந்தேன். தமிழக போலீசின் வேண்டுகோளை ஏற்று எனது பயணத்திட்டத்தை வாபஸ் பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னணி என்ன:

கூடங்குளம் அணுமின் திட்டத்தை பொறுத்த வரை மார்க்சிஸ்ட் ஆதரிக்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களிடம் பேசி, தீர்வு கண்டு திட்டத்தை கொண்டுவரவேண்டும், என்பது தமிழக மார்க்சிஸ்ட் நிலை. தமிழக கட்சி தலைமைக்கு எந்த தகவலும் சொல்லாமல் அச்சுதானந்தன் புறப்பட்டு வந்தது இங்குள் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது. நேற்று முன்தினம் இரவு கேரள உளவுத்துறை ஐ.ஜி., சென்குமார், அச்சுதானந்தனை சந்தித்து, "கூடங்குளத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சரியில்லை, எனவே அங்கு வர வேண்டாம்' என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ள விபரத்தை கூறியுள்ளார். என்றாலும் காலை 10 மணிக்கு அவர் புறப்பட்டார். கேரள மார்க்சிஸ்ட் செயலாளர் பிணராயி விஜயனுக்கு எதிராக நேரடி மோதலில் ஈடுபட்டுள்ள அச்சுதானந்தன், ஊடகங்களில் நிறைந்து நிற்பதற்காகத்தான், இப்படி ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். பாறசாலை என்ற இடத்தில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அச்சுதானந்தனுக்கு மாலை அணிவித்தது கோஷ்டி பூசலை வெளிச்சம் போட்டு காட்டியது.

கருத்துகள் இல்லை: