செவ்வாய், 18 செப்டம்பர், 2012

சென்னை வருகிறது ஏர்-இந்தியா ட்ரீம் விமானம், ட்ரீம்லைனர்!


Viruvirupu
ஏர் இந்தியா நிறுவனம் பலத்த சர்ச்சைகளின்பின் வாங்கியுள்ள விமானம், நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறது. போயிங் நிறுவனத்தின் அதிநவீன சொகுசு விமானமான ட்ரீம்லைனர், ஏர் இந்தியாவில் மிகப் பெருமையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
ட்ரீம்லைனர் விமானம் பயணிகளுக்கான முதல் பயணமாக, நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறது. இந்த விமானத்தை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
18 எக்சிகியூட்டிவ் இருக்கைகளும், 238 எக்கானமி இருக்கைகளும் உள்ள விமானத்தில் நாளை சென்னை வருவதற்காக 217 பயணிகள் டிக்கெட் வாங்கியிருப்பதாக ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.

ஏர்-இந்தியா இந்த விமானத்தை வாங்கியபோது, வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்குவதாக அறிவித்திருந்தது. ஆனால், சமீபகால வேலை நிறுத்தங்கள் காரணமாக, ஏர்-இந்தியாவின் வெளிநாட்டு வழித்தடங்களில் லோட்-ஃபாக்டர் மெச்சத் தக்க விதத்தில் இல்லை. எனவே ட்ரீம்லைனர் விமானத்தை இந்திய நகரங்களுக்கு இடையே பறக்க விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய திட்டப்படி ட்ரீம்லைனர், டெல்லி-சென்னை, சென்னை-டெல்லி, டெல்லி-பெங்களூர் என 3 வழித்தடங்களில் தினசரி இயக்கப்பட உள்ளது. விரைவில், மேலும் 6 வழித்தடங்களிலும், குளிர்காலத்தில் வெளிநாடுகளுக்கும் இதன் சேவையை நீடிக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி டெல்லியில் இருந்து அதிகூடிய தொலைவு ரூட் என்ற முறையில், இந்த விமானம் நாளை சென்னைக்கு வருகிறது.
முதல் முறையாக சென்னை வரவுள்ள ட்ரீம்லைனர் விமானத்தையும், அதில் வரும் பயணிகளையும் வரவேற்க சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வரவேற்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் உள்ள பயணிகள் ஒவ்வொருவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும். சென்னை விமான நிலையத்தில் 3 மணி நேர லே-ஓவரின் பிறகு ட்ரீம்லைனர் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும். பின்னர் அங்கிருந்து பெங்களூர் செல்கிறது.

கருத்துகள் இல்லை: