புதன், 19 செப்டம்பர், 2012

மீண்டும் 14 மணி நேரம் Power Cut? காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்துள்ளது

சென்னை: தமிழகத்தில், காற்றாலை மின்சார உற்பத்தியில், 2,000 மெகாவாட் குறைந்துள்ளது. தற்போது, 1,500 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. அதனால், பகல் பொழுதில், ஆறு மணி நேரமும், இரவில், நான்கு மணி நேரமும், மின் தடை செய்யப்படுகிறது. வரும் நாட்களில், காற்றாலை உற்பத்தி, மேலும் குறைய வாய்ப்புள்ளதால், மீண்டும், 14 மணி நேர மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10 ஆயிரத்து, 500 மெகாவாட் மட்டுமே உற்பத்தி என்கிற நிலையில், 12 ஆயிரத்து, 500 மெகாவாட் மின்சாரம், தற்போது தேவையாக உள்ளது. கல்பாக்கம், நெய்வேலி போன்ற மத்திய மின் திட்டங்களில் இருந்து, 1,500 மெகாவாட் அளவில், மத்திய அரசு, மின்சாரம் ஒதுக்கீடு செய்கிறது. எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்களில் இருந்து, 3,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
காற்றாலை மூலம், 3,500 மெகாவாட் மின்சாரம் மற்றும் பல்வேறு மின் பயன்பாடு சாதனம் மூலம், 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. அவ்வப்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால், இந்த மின் உற்பத்தியிலும், பாதிப்பு ஏற்படுகிறது. காற்று, மழை இருந்தால் மட்டுமே, மின்சாரம் கிடைக்கும் என்ற சூழல் எழுந்துள்ளது. கடந்த, ஆறு ஆண்டுகளாக, ஐந்து முதல், எட்டு மணி நேர மின்தடை அமலில் இருந்து வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பின், மின் தடைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மின் தடை மேலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. பருவமழை இல்லாததும், காற்று வீசாததும், மின் உற்பத்தியை முற்றிலுமாக முடக்கி உள்ளது. தினசரி பகல் பொழுதில், மொத்தம், 10 மணி நேரம் மின் தடை இருக்கிறது. இதனால், பொதுமக்கள், தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காற்றாலை உற்பத்தி, 1,500 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில், மேலும் குறையும் என, தெரிகிறது. இதனால், மின் தடை நேரம், 14 மணி நேரத்தை தாண்டும் அபாயம் உள்ளது. மின் தடையை எப்படி சமாளிப்பது என, தெரியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: