ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கலைஞர்: என்றைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன்

விழுப்புரம்: "தன்மானத்திலே பிறந்து; வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். என்றைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன். இத்தோடு நிறுத்திக்கொளுங்கள். தம்பிமார்களை தட்டிவிட்டால், பிரச்னை எங்கேயோ போய்விடும்' என, தி.மு.க., தலைவர் கலைஞர்  பேசினார்.
விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில், நேற்று இரவு நடந்த முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது: கருணாநிதி  தன்மானம் இல்லாதவர் என பேசியதாக பத்திரிகைகளில் பார்த்தேன். தன்மானம் என்றால் அளந்து, பிரித்து தருவார்களா... கடையில் கிடைக்குமா... தெரியாமல் பேசக்கூடாது. பெரியார், அண்ணாதுரையிடம் நட்போடு பழகி, வளர்ச்சியடைய எனது தன்மானமே காரணமாக அமைந்தது. இது குறித்து ஒரே வரியில் பதில் கூற வேண்டுமென்றால், மானமுள்ள சுயமரியாதை கொண்டவன் நான். எனது மகன் ஸ்டாலின் கூட ஆத்திரப்பட்டார். பேராசிரியரும் மென்மையாக கடிந்து கொண்டார். இதுபோல் கருணாநிதியை சொன்னது எத்தனை பேரை குத்தியிருக்கும். இருந்தாலும், பொறுமை காக்க வேண்டும். சொன்னவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் கருணாநிதியைச் சொன்னது தவறென்பது தெரியும்.
தன்மானம் உள்ளதால் தான் தாங்கி உள்ளேன். இந்த நாடு அமளிக்காடாக மாறக்கூடதென்பதால் தாங்கியுள்ளேன்.

கூடங்குளத்தில், தி.மு.க., ஆட்சியில், மின்சார உற்பத்தி ஆலை உருவாக்க பல கோடி ரூபாயில் அன்று திட்டம் போடப்பட்டது. கூடங்குளம் மக்கள் பயந்தனர். வெளிநாடுகளைப் போல் அணு உலைகள் பாதிப்பு ஏற்படுமென நடுங்கி போராடினர். தன்மானம் பேசியவர், அப்போது என்ன சொன்னார். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கிடும் வரை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாதென தீர்மானம் போட்டார். மக்களும் ஊக்கமடைந்தனர். இன்று, மின்சார உற்பத்திக்கான பணி துவங்கியதால், மக்கள் அச்சத்தில் போராட துவங்கினர். இதனை பேசி, சரி செய்திட தெம்பின்றி, நல்லெண்ணமின்றி சுட்டுத் தள்ளியதில் ஒருவர் இறந்துவிட்டார். எங்கே தன்மானம் உள்ளது. தமிழனுக்கு சொரணை இல்லை, வீரம் ஒழிந்துவிட்டது.

தினமும் கோர்ட்டில் வாய்தா வாங்குபவர் தன்மானம் பற்றி பேசுவதா. அரசு பொருளை விலை கொடுத்து வாங்கியது தவறென, கோர்ட் சுட்டிக்காட்டும் அளவிற்கு நடந்துள்ளீர்கள். அட தன்மானமே, உன் நிலைமை இப்படி ஆயிற்றே. 200 முறை வாய்தா வாங்குவது, நீதிபதி மேல் புகார் கூறுவது, 68 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மானம் போகவில்லையா... கருணாநிதிக்கா தன்மானம் போயிற்று. தன்மானத்திலே பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். ஏதோ இரண்டு, மூன்று முறை தோற்று விட்டோம், எதிர் கட்சியாக கூட ஆக முடியவில்லை. யாருக்காக உழைத்தோமோ அவர்கள் செய்த தவறு அது. என்றாலும் கோபமோ, வருத்தமோ இல்லை. தன்மானம் என்றால் என்ன பொருள் என, உனது தமிழாசிரியர் கூறுவார். எல்லாம் எனக்கு தெரியும். அதற்குரியவர் யார் என, ஒரு நாள் விவாதம் நடத்திப் பார்க்கலாமா... சட்டசபையில் தேவையில்லை; பொது மண்டபத்தில் பேசலாமா... பட்டிமன்றத்தில் தகராறு வந்து விடாது. பயம் வேண்டாம். ஆணும், பெண்ணும் வாதிடும்போது கைகலப்பு நேராது. அதனை நான் விரும்பவும் இல்லை. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், தம்பிமார்களை தட்டிவிட்டால் பிரச்னை எங்கேயோ போய் விடும். இவ்வாறு தி.மு.க., தலைவர் கலைஞர் பேசினார்

கருத்துகள் இல்லை: