அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் மருத்துவமனை, நோயாளிகளை கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்தியுள்ளது.“ஒரு நோயாளி மாரடைப்புக்கான அறிகுறிகளால் துன்புற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவி செய்வதற்கு பதிலாக அன்றைய கட்டணமாக $672 அவர் கட்ட வேண்டும் என்பதாக ஒரு மருத்துவமனை ஊழியர் அவரிடம் சொன்னார்” என்பது மாநில தலைமை அரசு வழக்கறிஞர் லோரி ஸ்வான்சன் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை நோயாளிகளிடமிருந்து மருத்துவக் கட்டணங்களை வசூலிக்கும் பொறுப்பை அக்ரிட்டிவ் ஹெல்த் என்ற கடன் வசூல் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. பணம் வசூலிக்கும் ஊழியர்களுக்கு நோயாளிகளின் நோய்கள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கக் கூடாது என்ற விதியை மீறி, அக்ரிட்டிவ் ஹெல்த்துடன் சேர்ந்து மருத்துவமனை ‘நிலுவைகளை செலுத்தா விட்டால் சிகிச்சை மறுக்கப்படும்’ என்று நோயாளிகள் மிரட்டியுள்ளது.

தங்கள் வலைத்தளத்தில் “நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்களை முதன்மைப் படுத்துகிறது” (Putting patients first makes us #1) என்று பிரகடனப்படுத்தியிருக்கும் இந்த மருத்துவமனை கட்டணம் கொடுக்க முடியாத ஏழைகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் சட்ட விரோத செயலையும் செய்துள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 21 கேஸ்களில் 7-ல் மருத்துவ சிகிச்சை வழங்கும் நேரத்தில் பணம் வசூலிக்க மருத்துவமனை பயன்படுத்திய முறைகள் நோயாளிகளின் உரிமைகளை மீறுவதாக இருந்தன என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆய்வு அறிக்கையில் வெளியான தகவல்கள் மக்ககள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மருத்துவ கடன்கள் வசூலிப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று செனட்டர் அல் பிராங்கன் முதலானவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்த அறிக்கையின் விளைவாக மின்னசோட்டா பல்கலைக் கழக மருத்துவமனை மத்திய அரசு திட்டங்களான மெடிக்எய்ட் (ஏழைகளுக்காக அரசு காப்பீடு), மெடிகேர் (வயதான மற்றும் மாற்று திறனாளிகளுக்காக அரசு காப்பீடு) திட்டங்களிலிருந்து நீக்கப்படலாம். மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யூஸ்டில் பதவி விலகியுள்ளார்.
நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதன் மூலம் பல ஆண்டுகளாக ஆதாயம் பெற்று வரும் அக்ரிட்டிவ் 2011-ம் ஆண்டு $29.2 மில்லியன் (ரூ 160 கோடி), லாபம் ஈட்டியிருக்கிறது. நோயாளிகளை மிரட்டியதற்காக அரசு தலைமை வழக்கறிஞர் ஸ்வான்சன் அதன் மீது மின்னசோட்டா மாநிலத்தில் செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளார்.
ஆனால் யாரும் “தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை சுரண்ட ஏன்  அனுமதிக்க வேண்டும்? அரசு ஏன் மருத்துவமனைகளை நடத்துவதில்லை? மக்களின் வாழ்வாதார பிரச்ச்னையான மருத்துவ சிகிச்சை அளிப்பதை அரசு ஏன் புறக்கணிக்கிறது?” என்ற கேள்விகளை எழுப்புவதில்லை.
கியூபா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் அரசே பொது மருத்துவமனைகளை நடத்துகிறது. மக்களுக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. ஒலிம்பிக் துவக்க விழாவின் போது தனது பொது மருத்துவமனை அமைப்பை பற்றி பிரிட்டன் பெருமையாக பேசியது. என்றாலும் அங்கும் இப்போது பொது மருத்துவத்திற்க்கான மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் உலகிலேயே மலிவான முறையில் வழங்கப்படுவது பிரசித்தி பெற்றது.
அமெரிக்காவில் வாழும் மக்கள் கனடாவிற்கோ, கியூபாவிற்கோ திருட்டுத்தனமாக சென்று பெரும் வியாதிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்வது வேடிக்கையல்ல, வெட்கக் கேடானது. அமெரிக்காவின் மருத்துவத் துறையை பற்றி மைக்கேல் மூர் தயாரித்த “சிக்கோ” எனும் ஆவணப்படம் அமெரிக்க தனியார் மருத்துமனைகளின் மக்கள் விரோதப் போக்குகளையும் அவலங்களையும் படம் பிடித்து காட்டியிருக்கிறது.
முதலாளிகளின் சொர்க்கம் அமெரிக்காவில் மருத்துவமனைகளில் ஏழைகள் புறக்கணிக்கப்படுவதும் கட்டணம் வசூலிப்பதற்காக நோயாளிகள் கொடுமைப்படுத்தப்படுவதும் ஆச்சரியத்திற்குரியவை இல்லைதான். தமது இலாப வேட்டைக்காக உலகம் முழுவதும் போர்கள் நடத்தியும் மக்களை கொன்று குவித்தும் செல்வம் சேர்க்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மக்களை வாழவிட்டிருப்பதே கருணை தான்.