ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பெனாசிர் சொல்லி 2 நாடுகளுக்கு அணு தொழில்நுட்பத்தைக் கொடுத்தோம்-ஏ.க்யூ. கான்

இஸ்லாமாபாத்: மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோ சொல்லி, 2 நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வழங்கியதாக பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் ஜங் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அழைத்து 2 நாடுகளின் பெயர்களைக் கொடுத்து, அவர்களுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பம் தொடர்பாக உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
பெனாசிரே சொல்லிய பிறகு என்னால் அதை மீறாமல் இருக்க முடியவில்லை. அப்போது நான் தனி மனிதன் அல்ல. பிரதமரின் சொல்லைக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தேன். எனவே அவர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தினேன்.

அதேசமயம், அணுத் தொழில்நுட்பத்தை அளிப்பது எளிதான காரியமாக இல்லை. கிட்டத்தட்ட 800 பேர் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டியதாயிற்று என்றார் கான்.
கான் கடந்த 2004ம் ஆண்டு கைது செய்யப்பட்டு வீ்ட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். வெளிநாடுகளுக்கு அணு தொழில்நுட்பத்தை அளித்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். வட கொரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை கான் அளித்தார் என்றும் அப்போது கூறப்பட்டது.
இருப்பினும் பெனாசிர் எந்த இரண்டு நாடுகளுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கச் சொன்னார் என்பதை கான் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: