ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சுந்தரபாண்டியன் - சிரித்து மகிழவும் சிந்திக்கவும்

தேனி மாவட்டத்தில் கல்லூரியை முடித்துவிட்டு வெட்டி ஆபீசராக வலம் வருகிறார் சசிகுமார். இளம்பெண்கள் முதல் வயதான கிழவிகள் வரை, ஊரிலுள்ள அத்தனை பெண்களுக்கும் சசிகுமாரைப் பிடிக்கும். அறிமுக பாடலிலேயே ரஜினி ஸ்டைலில் அதிரடி ஆட்டம் போடும் சசிகுமார், தொடர்ந்து படம் முழுவதும் பல சேட்டைகளை செய்து வருகிறார். சசிகுமாரின் நெருங்கிய நண்பர்களாக பரோட்டா சூரி, பிரபாகரன் இருவரும் படம் முழுவதும் வருகிறார்கள்.
 பிரபாகரன் ஒரு பெண்ணை காதலிப்பது சசிகுமாருக்கு தெரியவருகிறது. பிரபாகரன் அந்த பெண்ணை சைட் அடிக்க செல்லும் போதெல்லாம் அவருடன் சென்று வருகிறார் சசிகுமார். அதே பெண்ணை 6 வருடங்களாக காதலிக்கும் அப்புகுட்டியும் சசிகுமாரின் நட்பு வட்டாரத்தில் இணைகிறார். 

தன் நண்பனின் காதலுக்காக தூது செல்லும் சசிகுமாரையே ஹீரோயின் காதலிப்பதாக சொல்லிவிட பிரபாகரனும், அப்புகுட்டியும் சசிகுமாரின் மேல் கடுப்பாகிவிடுகிறார்கள். (பல படங்களில் பார்த்த காட்சி தான் என்றாலும் அதற்கு அடுத்து வரும் ரகளைகள் அதை மறக்க வைத்துவிடுகின்றன.) பேருந்தின் முன் பக்கத்திலிருந்து பிரபாகரனும், பின் பக்கத்திலிருந்து அப்புகுட்டியும் சைட் அடிப்பது போன்ற ரகளைகளுடன் கதை நகரும் நேரத்தில்  அப்புகுட்டியின் காதல் விவகாரமும் பிரபாகரனுக்கு தெரியவர, அப்புகுட்டியை அடிக்கச் செல்கின்றனர் சசுகுமாரின் நண்பர் பட்டாளம். பேருந்தில் நடக்கும் இந்த சண்டையில் பிரபாகரன் அப்புகுட்டியை பேருந்திலிருந்து தள்ளிவிட கீழே விழுந்து இறந்து போகிறார் இதுவரையில் வில்லன் கேரக்டரில் வந்த அப்புகுட்டி.

பிரபாகரன் தான் தள்ளினார் என தெரிந்திருந்தும் நண்பனுக்காக கொலைப்பழி ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்கிறார் சசிகுமார். தண்டனைக்காலம் முடிந்து சசிகுமார் வெளியே வருவதற்குள் முறைமாமனான விஜய் சேதுபதியுடன் ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிடுகிறது. ஹீரோயினுக்கு விருப்பமில்லாதது தெரிந்ததும் தன் ஊரில் செல்வாக்குடைய சசிகுமாரின் தந்தை ஹீரோயினின் தந்தையிடம் சென்று சம்மந்தம் பேசுகிறார். 

இவர்களுக்குள் சமாதானமாகி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள ”அட யார் தான் வில்லன்? என்ற 
கேள்வி எழும் போது, அப்புகுட்டியின் நண்பன், பிரபாகரன், விஜய சேதுபதி ஆகிய மூவரும் வில்லன் பொருப்பை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். நண்பனே எதிரியாக மாறியது தெரியவரும் போது சசிகுமார் என்ன செய்கிறார்? நண்பர்களின் சூழ்ச்சியை முறியடித்து சசிகுமார் ஹீரோயினை திருமணம் செய்து கொள்கிறாரா? இல்லை தன் நண்பனான பிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்கிறாரா? என்பது தான் கிளைமேக்ஸ்.


சசிகுமார் தனது நடிப்பில் அடுத்த வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார். ஹீரோயின் லக்‌ஷ்மி மேனன் தேனி மாவட்டத்து பெண்ணாக நன்றாக நடித்துள்ளார். பரோட்டா சூரியின் காமெடி முதல் பாதியில் கலைகட்டுகிறது. அப்புகுட்டியின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்களின் சாயல் தெரிந்தாலும் கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் 
முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து கதாபாத்திரத்திடமும் கதையை நகர்த்த சொல்லியிருக்கிறார் இயக்குனர். 

பாடல்களும், கதைக்களத்தை கிராமமாக காட்டாததும் தான் பின்னடைவே தவிர மற்றபடி திரைக்கதையின் வேகம் படு சூப்பர். 

சுந்தரபாண்டியன் - சிரித்து மகிழவும், சிந்திக்கவும் சூப்பரான படம்.

கருத்துகள் இல்லை: