செவ்வாய், 25 செப்டம்பர், 2012

நிலக்கரி ஊழல்: 1993ம் ஆண்டு முதல் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவு

புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான, சி.பி.ஐ., விசாரணை வரம்பு, நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்து, 1993ம் ஆண்டு முதல், விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு, மத்திய ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.,) உத்தரவிட்டுள்ளது.
ஐ.மு., கூட்டணியின், முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சமீபத்தில், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தாக்கல் செய்த அறிக்கையில், "முறையான ஏல நடைமுறைகளை பின்பற்றாததால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2004 - 09ம் ஆண்டுகளில், நடந்த சுரங்க ஒதுக்கீடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்த போதும், சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், அதை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி தரப்பில் வலியுறுத்தப் பட்டது.
இது தொடர்பாக, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சி.வி.சி.,க்கு கடிதம் எழுதியிருந்தார்.இதையடுத்து, "நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்து, 1993 முதல் விசாரணை நடத்த வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு, சி.வி.சி., நேற்று உத்தரவிட்டது. இதனால், தே.ஜ., கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த, சுரங்க ஒதுக்கீடு குறித்தும் விசாரிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:தே.ஜ., கூட்டணி ஆட்சிக் காலத்தில், சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. எனவே, 1993லிருந்து நடந்த சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து, விசாரிப்பதால், எங்களுக்கு எந்த பயமும் இல்லை. சுரங்க முறைகேடு குறித்த, சி.பி.ஐ., விசாரணையை தாமதப்படுத்தவே, காங்கிரஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.நிலக்கரி சுரங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட, 1976லிருந்து விசாரணை நடத்தினாலும் அல்லது 17ம் நூற்றாண்டிலிருந்து விசாரணை நடத்தினாலும், எங்களுக்கு கவலை இல்லை.இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

இதற்கிடையே, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், ""விதிமுறைகளை மீறி செயல்பட்ட, சில நிறுவனங்களின் சுரங்க உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, அடுத்த வாரத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்

கருத்துகள் இல்லை: