வியாழன், 27 செப்டம்பர், 2012

கோவை Power Cut உற்பத்தி இழப்பு மாதம் 5,500 கோடி

கோவை மாவட்டத்தில், தினமும் 12.00 மணி நேரம் முதல் 14.00 மணி நேரம் மின்தடை நீடிப்பதால், மின்சாரத்தை நம்பியுள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் உற்பத்தி இழப்பு மாதம் ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாய் இருக்கும் என தொழில் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக, பலரால் ஈர்க்கப்படும் மாவட்டம் கோவை. பருத்திக்கும், பஞ்சாலைக்கும் புகழ் பெற்ற நகரமாக, இன்ஜினியரிங் தொழிலில் அபரிமித வளர்ச்சியாக, சர்வதேச ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படுகிறது. தொழில் நகரமாக விளங்கும் கோவைக்கு, உயிர் நாடியாக விளங்குவது மின்சாரம். ஆனால், தற்போது நிலவும் மின்வெட்டு, கோவைக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் உள்ள மில்களில், 45 சதவீத மில்கள், தமிழகத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலும், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இயங்கி வருகின்றன. பருத்தியிலிருந்து நூல் எடுத்து, துணியாக மாற்றி, உள்ளூர் தேவைக்கும், ஏற்றுமதிக்கும், கோவை, திருப்பூர் மாவட்டங்கள் முன்னோடியாக திகழ்ந்தன. ஆனால், சமீபகாலமாக நிலவும் தொடர் மின்வெட்டால், தொழில் நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும், கணிசமான அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளதால், மில்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் தினகரன் கூறுகையில், ""தினமும் 10.00 -12.00 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது.
உற்பத்தி இழப்பு 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் சீரான மின்வெட்டு ஏற்படுத்தினால், பெரும் அளவுக்கு மின்வெட்டை தவிர்க்க முடியும். டீசலை பயன்படுத்தி ஜெனரேட்டரில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், யூனிட்டுக்கு 14 ரூபாயாக உள்ளது. தனியார் நிறுவனங்கள், மின்சாரத்தை வெளி மாநிலங்களில் வாங்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். முறையான மின்சார மேலாண்மை இருக்குமானால், மின்வெட்டு பிரச்னையை தமிழகம் எளிதாக சமாளிக்க முடியும். மின்சாரம் சீராக வினியோகித்தால், தமிழகத்தில் உள்ள மில்கள், 90 சதவீதம் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. ஆனால், தற்போது 40 முதல் 65 சதவீத அளவுக்கே நூல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பல, ஜெனரேட்டரையும் பயன்படுத்த இயலாத நிலையில், ஜவுளித் துறையில், மாதந்தோறும், 3,000 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பை சந்தித்து வருகிறது. இதில், ஏற்றுமதிக்கான உற்பத்தியையும் பாதித்து வருகிறது. இவ்வாறு, தினகரன் கூறினார். இன்ஜினியரிங் தொழில்:பவுண்டரி முதல், விலை உயர்ந்த வாகன உதிரி பாகங்கள் வரை, மிக நுணுக்கமாக தயார் செய்து வரும் கோவை தொழில் நிறுவனங்கள், மின் வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் தொழிலை பொருத்தவரை, ஒவ்வொரு பொருளை தயாரிப்பதிலும், தொடர்ச்சியான மின்சாரம் தேவையானது. முன்னறிவிப்பில்லாமல் மேற்கொள்ளப்படும் மின்வெட்டால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியை மேற்கொள்ள முடிவதில்லை. பலர், தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரும் நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களை நிறைவேற்றுவதில், சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. கோவை மாவட்டத்திலிருந்து மட்டும், ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு, மோட்டார் பம்ப் செட்டுகள், வாகன உதிரி பாகங்கள், வார்ப் படங்கள், வால்வுகள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மாதம் ஒன்றுக்கு, இந்த தொழிற்சாலையிலும் உற்பத்தி பாதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என்கிறார், தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்க (சீமா) முன்னாள் தலைவர் ஒருவர்.


தங்க நகை உற்பத்தி:
ஆபரணத்தங்கத்தில், இலகு ரக நகைகளை தயாரிப்பதில் முன்னிலை பெற்றுள்ளது கோவை. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதியை மேற்கொண்டு வரும் இந்த தொழிலிலும், மின்சாரத்தின் பங்கு அளப்பரியது. இலகு ரக ஆபரண உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவால், இத்தொழிலில், மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


விவசாயம்:
கோவையில் அதிகமாக நெல், கடலை, மக்காச்சோளம், வாழை, திராட்சை பயிரிடப்படுகின்றன. விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது. இதைக் கொண்டு, நீர்ப்பாசன வசதியை மேற்கொள்ள இயலாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதிகளில் வாழை மற்றும் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமான இழப்பு மாதத்துக்கு 150 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவையில் மின்சார பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள ஒரு மாதத்துக்கான உற்பத்தி இழப்பு (தோராயமாக):
ஜவுளித்தொழில் - ரூ.3000 கோடி
இன்ஜினியரிங் - ரூ.2000 கோடி
ஜுவல்லரி - ரூ. 100 கோடி
விவசாயம் - ரூ.150 கோடி
பிற சேவைகள் - ரூ. 250 கோடி
கோவை மண்டலத்தில், மின்பற்றாக்குறையால் ஏற்படும் உற்பத்தி அளவு 5,500 கோடியாக இருக்கும் என, தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

"தனியார் மின் உற்பத்தியை பெற்றுத்தர வேண்டும்':
மின்சாரப் பிரச்னையை தீர்க்க, அரசு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து, தொழிலதிபர்கள் சிலர் கூறியதாவது:
* வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி பயன்படுத்த, தொழில் நிறுவனங்களுக்கு மின்வாரியம் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்தின் மின் உற்பத்தி திறன் கொள்ளளவு, 10 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேலாக பல்வேறு வகையான மின் இனங்களில் உள்ளன.
* மரபு சாரா எரிபொருள், காஸ், சிமென்ட் நிறுவனங்களில் சுய உற்பத்தி போன்றவைகளை முழுமையான அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் மின் உற்பத்தியை ஊக்குவித்து, அந்த மின்சாரத்தை பெற்று தர வேண்டும்.
* தமிழகத்தின், மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை பயன்படுத்தும் சென்னையில், ஒரு மணி நேரம் மட்டுமே மின்தடை உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் சீரான மின்தடையை அமல்படுத்த வேண்டும்.
* மின்சார உற்பத்திக்கு தயாராகி வரும் மின் திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும்.
* செய்யாறு, ஸ்ரீவைகுண்டம், கூடங்குளம் உட்பட திட்டங்களை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* மின்சார மேலாண்மையில் உள்ள தொய்வை சரி செய்ய, மிகச்சரியான தீர்வுகளை அறிந்து வைத்திருக்கும் அதிகாரிகள், தொழில் முனைவோர், சங்க அமைப்புகள் கொண்ட குழு அமைத்து, ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: