வியாழன், 27 செப்டம்பர், 2012

சும்மா இருப்பதே சுகம் என்ற முடிவுக்கு வர வேண்டி உள்ளது” -கருணாநிதி

Viruvirupu “மின்வெட்டு, கூடங்குளம் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை ஆகியவற்றில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்து வருகிறார்” என்று கடுமையாக சாடி முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கைக்கு பதில் வந்திருக்கிறது.
“இரக்க உணர்வோடு ஆறுதல் கூற வருபவர்களையும், கடந்த காலத் தவறுகளைச் சுட்டிக்காட்டி இனி அவ்வாறு எதுவும் நடந்திடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையை அறிவுரையாகக் கூறினால்கூட, சல்லடம் கட்டிக் கொண்டு சண்டைக்கு வருபவர்களிடம்; என்ன பேசுவது? எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? இந்த நிலையில் என்ன பேசுவது? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் – எப்படிப் பேசுவது என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் – சும்மா இருப்பதே சுகம் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இவரது அறிக்கையில், “தமிழ்நாடே இன்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது. ஏழைகள், நடுத்தர மக்கள், ஏன் – வசதி வாய்ப்புள்ளவர்கள்கூட வரலாறு காணாத மின் வெட்டினால் படுகின்ற அல்லல் கொஞ்சம் நஞ்சமல்ல! இந்த இருண்ட இழி நிலைக்கு திமுகதான் காரணம் என்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற ஜெயலலிதா திசை திருப்பும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறார்.
நம் தமிழ்நாட்டு மக்களின் தவிப்பு – அவர்களை வாட்டி வதைக்கும் இருட்டு – வாய் பிளந்து நிற்கும் பசி, பஞ்சம், பட்டினி என்ற வேதனையான கொடுமைகள் – இவற்றிலிருந்து நாமும் தமிழர்கள் என்ற காரணத்தால் – இன்னமும் நம்மை நம்பியிருக்கிற தமிழர்களை நினைத்து நினைத்து நெஞ்சுருக – சிலவற்றைச் சொன்னால், அந்த நெஞ்சிலேயே – நெடிய வாளால் – ஈட்டியால் குத்துகிற வகையில் அல்லவா பதில் அறிக்கை வகிறது?
இல்லாததும், பொல்லாததும் கூறி எதிர்க் கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்கு முற்படாமல், இனியாவது தான் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் – மக்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர் என்பதை உணர்ந்து – தெளிந்து உதவிட முன்வருவாரா? என்று தமிழக மக்கள் தாங்கொணா துயரத்தோடு ஒலி எழுப்பும் இந்த நேரத்திலாவது – தமிழர்களின் கஷ்டத்தை உணர்ந்து – சிறியதோர் வெளிச்சத் துளி கிடைப்பதற்குப் பாடுபட முன்வருவாரா? பணியாற்றக் கிளம்புவாரா? இந்தக் கேள்விகள்தான் அவருடைய அறிக்கைக்கு பதிலாக அமைகின்றன” என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அவருக்கென்ன, அடுத்த தி.மு.க. ஆட்சியை அமைக்க அவரது வாரிசுகளை விட தமிழக முதல்வர் உதவுகிறார்! கொடுத்து வைத்த மனுஷன்!!

கருத்துகள் இல்லை: