வெள்ளி, 28 செப்டம்பர், 2012

BJP ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள்: சிபிஐ விசாரணை ஆரம்பம்

கடந்த 1993-2004ம் ஆண்டுகளில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பயனடைந்ததாகக் கூறப்பட்ட 24 தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இதில் பாஜக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் (1999-2004) நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் ஆரம்பித்து 2004ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 24 நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாக வந்த புகாரை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆய்வு செய்தது.
இந்த ஆணையத்தின் உத்தரவையடுத்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை நேற்று தொடங்கியது.

இதையடுத்து, இந்த நிறுவனங்களுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை நிலக்கரி அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளை அணுகி சிபிஐ விரைவில் பெற உள்ளது. மேலும், எந்த அடிப்படையில் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பதையும் சிபிஐ விசாரிக்க உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கடந்த 1993ஆம் ஆண்டு இயற்கை வளங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிலக்கரி சுரங்க சட்டம் 1973இல் மாற்றம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான நிலக்கரி சுரங்கங்கள் பாஜக ஆட்சியில் ஒதுக்கப்பட்டவை:
இந் நிலையில் பெரும்பாலான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்டவை என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான பி.எல். புனியா குற்றம் சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், இப்போது ரத்து செய்யப்பட்ட பெரும்பாலான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்டவை. இது தொடர்பாக பாஜக-வினர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தவறானவை என்றார்.
பாஜக பெரும் பணம் சம்பாதித்தது, காங்கிரசுக்கும் ஆசை வந்தது:
இந் நிலையில் மத்தியப் பிரதேச மூத்த காங்கிரஸ் எம்பியான சஜ்ஜன் சிங் வர்மா நிருபர்களிடம் பேசுகையில், நிலக்கரி சுரங்கங்களை வேண்டியவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் ஒதுக்கி பாஜக பெரும் பணம் ஈட்டியது. அதைப் பார்த்து சில காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஆசை வந்துவிட்டது. இவர்களும் வேண்டியவர்களுக்கு சுரங்கங்களை ஒதுக்க ஆரம்பித்தனர் என்றார்.

கருத்துகள் இல்லை: