திங்கள், 24 செப்டம்பர், 2012

கனிமொழி ஆதரவு எம்.பி.க்கு மத்திய அமைச்சர்

கனிமொழி ஆதரவு எம்.பி.க்கு டில்லியில் பிளஸ்! மத்திய அமைச்சரவை எகிறுகிறது பிளஸ் 17!!

Viruvirupu
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் பதவி விலகியதை தொடர்ந்து, அமைச்சரவை மாற்றப் பேச்சுக்கள் டில்லியில் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்கிறார்கள், டில்லி அரசியல் வட்டாரங்களில்.
இம்முறை சற்று பெரிய எண்ணிக்கை பற்றி பேசிக்கொள்கிறார்கள். மொத்தம் 17 புதிய அமைச்சர்கள் இணைந்து கொள்ளலாம் என்பதே கணிப்பாக உள்ளது.
ஏற்கனவே காலியான சில அமைச்சரவை இலாகாக்கள், கூடுதல் பொறுப்பாக சில அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை புதியவர்கள் வசம் கொடுக்கப்படலாம் என்பது சாத்தியமே. பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

அப்போது தமது எண்ணத்திற்கு ஏற்ப பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தக் கூடியவர்களை தமது அமைச்சரவையில் சேர்க்க விரும்புவதாகவும், எனவே அதற்கேற்ற நபர்களை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரைக்குமாறும் மன்மோகன் கூறியதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதை வேறு வார்த்தைகளில் சொன்னால், நம்ம அழகிரியை அமைச்சராக வைத்துக்கொண்டு திண்டாடுவது போன்று வேறு யாரையும் அமைச்சரவைக்குள் தள்ளிவிடாதீர்கள் என்பதே பிரதமரின் வேண்டுகோள்.
சோனியா காந்தி தனது வீட்டில் இன்று, புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி. ஜோஷி, பிரித்விராஜ்  சவான், நாராயண் ரானே, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மோகன் பிரகாஷ், உள்பட சில தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்தே டில்லியில் கணக்கு போட தொடங்கியிருக்கிறார்கள். தற்போது காலியாகியுள்ள அமைச்சுகள், ஏற்கனவே காலியாக வைக்கப்பட்டிருந்த சில அமைச்சுகள், மற்றும் கூட்டணிக் கட்சியினருக்காக காத்திருக்கும் சில அமைச்சுகள் என்று எல்லாவற்றையும் கூட்டியே, மொத்தம் 17 புதிய அமைச்சர்கள் இணைந்து கொள்ளலாம் என்று ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.
17-ல் இரண்டு தி.மு.க.-வுக்கு என்றும் அடித்துச் சொல்கிறார்கள்.
தி.மு.க.-வின் முப்பெரும் தலைவர்கள் (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி) தமக்கிடையே அடித்துக் கொள்ளாவிட்டால், கரைவேட்டி கனவான்கள் இருவருக்கு அதிஷ்டம் அடிக்கும்!
எமக்கு கிடைத்த தகவல், கனிமொழி ஆதரவாளர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தரப்பும் அவருக்கு ஓகே சொல்லி விட்டது. அழகிரிக்கு ஆட்சேபணை கிடையாது என்கிறார் அவர்.
தளபதி தயவு வைக்க வேண்டும். அல்லது தளபதிக்கு செக் வைக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை: