ஆயுத போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு அவசியமற்றதென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. சமஷ்டி முறைமையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தியங்களை மையப்படுத்திய அதிகாரப்பகிர்வு தற்போது அவசியப்படாதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் பிராந்தியங்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் ஓர் சமஷ்டி முறை ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளும், ஐக்கிய தேசியக் கட்சியும் கடந்த காலங்களில் இணக்கப்பாட்டை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சமஷ்டி முறைமைத் தீர்வுத் திட்டம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கு மக்கள் அன்றாடம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தற்போதைய தேவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதனை விடவும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்ட மூலம் இலங்கை அரசியல் சாசனத்தின் ஒர் அங்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அரசியல் தீர்வுத் திட்டமொன்றின் அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக