வயலில் குப்பையை கொட்டி விவசாயம் செய்த போது, பயிர் நன்றாக வளர்ந்தது; மனிதர்களும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போது, வயலில் உப்பை கொட்டி விவசாயம் நடப்பதால் பயிர் கருகுகிறது; ஆரோக்கியத் துக்கும் கேடு ஏற்பட்டுள் ளது,'' என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
பாரம்பரிய உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சி, மேட்டுப்பாளையம் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நடந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கண்காட்சியை திறந்து வைத்து பேசியதாவது: நாட்டில் இயற்கையும், பெண்களும் ஒடுக்கப்படுகின்றனர்; "பசுமை புரட்சி' என்பதெல்லாம் பொய்த்துவிட்டது. இந்தியாவில் தினமும் 30 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். ஐந்து வயது குழந்தைகளில் 45 சதவீதம் பேர் சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயலில் குப்பையை கொட்டி விவசாயம் செய்தபோது பயிர் நன்றாக வளர்ந் தது; மனிதர்களும் ஆரோக்கியமாக வாழ்ந் தனர். தற்போது, உப்பை கொட்டி விவசாயம் செய்வதால் பயிர் கருகுகிறது; மனிதனின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு 80 ஆயிரம் டன் விஷத் தன்மையுள்ள உரம், யூரியா, உப்பு ஆகியவற்றை நிலத்தில் போடுவதால் பூமி முழுவதும் உப்புக்கண்டமாக மாறி வருகிறது. உப்பு உயிரை கொல்லும் தன்மை உடையது. வெளிநாட்டிலிருந்து வாங்கப்படும் விதைகள், ஒருமுறை மட்டுமே முளைக்கும் தன்மை உடையவை. வளர்ந்த செடியிலிருந்து எடுக்கப்படும் விதையை முளைக்கப் போட்டால் அது முளைப்பதில்லை. நாம் முன்பு, பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக முளைக்கும் தன்மையுடைய விதைகளை விவசாயம் செய்து வந்தோம். பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது தண்ணீரையும், உணவுப்பொருட்களையும் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து விற்பனை செய்கின்றன; இதற்கு நாம் அடிமையாகின்றோம்.
நீண்ட நாள் வைக்கப்படும் உணவு கெடாமல் இருக்க, உணவுடன் ரசாயனப் பொருட்களை கலக்கின்றனர். இதை சாப்பிடும் போது காலப்போக்கில் சிறுவர், இளைஞர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, டப்பாவில் பதம் செய்த உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம். வாசனையும், ருசியும் உள்ள உணவுப் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தராது. வீடுகளில் தயாரிக்கப்படும் உணவை இரண்டு நாட்கள் வைத்துக்கூட சாப்பிடலாம்; நன்கு மென்று சாப்பிட்டால் நோய் வராது.
நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அதற்கு, அவர்கள் படித்த படிப்பு அறிவாக மாறவில்லை. மனப்பாடம் செய்து தேர்வு எழுதி பட்டம் வாங்குபவர்கள் தான் வேலையில்லாமல் உள்ளனர். அறிவு, அனுபவமாக மாற வேண்டும். அப்போது தான் சுயதொழில் செய்யும் ஆற்றல் கிடைக்கும். இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார்.
முன்னதாக விழாவுக்கு, ஹோலி ஏஞ்சல்ஸ் கல்வி நிறுவன தாளாளர் ரூபன் சுகுமார் முன்னிலை வகித்தார். கல்வியியல் பள்ளி முதல்வர் கருப்பண்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சரவணன், "நமது நெல்லை காப்போம்' மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக