20 - 25 வருடங்களின் பின்னர் நாட்டுக்கு திரும்பி வருவோரின் காணிகள் சட்ட விரோதமாக வேறு சிலரால் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளதாக கூறும் பல முறைப்பாடுகள் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து கிடைத்து வருவதாக மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிகாரிகள் தினகரனுக்குத் தெரிவித்தனர்.
மேற்படி காணிகள் புலிகளின் மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதாகவும் இவ்வாறு சட்ட விரோதமாக காணியில் குடியிருந்தோருக்கு யுத்தநிறுத்த காலத்தின் போது அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அதிகாரபூர்வ காணி உறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை கைவிட்டுச் சென்றவர்களை துரோகிகளாக கருதினர். இந்தக் காணிகளை தமது இயக்கத்துக்கு மிகுந்த பங்களிப்பை வழங்கிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து அக்குடும்பங்களுக்கு மாவீரர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அத்துடன் இந்தக் காணிகளுக்கு புலிகள் உறுதிகளை வழங்கினர். பின்னர் அந்தக் காணிகளுக்கு அப்போதைய அரசாங்கம் அதிகாரபூர்வ உறுதிகளை வழங்கியது.
அத்துடன் யுத்தநிறுத்த காலத்தின் போது குறிப்பிட்ட காணிகளின் மூல உறுதி ஆவணங்கள் காணிப் பதிவு அதிகாரிகளினால் உயர் மட்டத்தின் அனுமதி மற்றும் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.
இந்நிலையில் இக்காணிகளுக்கு உரிய சொந்தக்காரர்கள் நீண்ட காலத்துக்கு பின்னர் நாடு திரும்பியதும் தமது காணிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர்.
நாளாந்தம் இவ்வாறான ஐந்து முறைப்பாடுகள் வரை தமக்கு கிடைப்பதாக முல்லைத்தீவு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறுகிறார்.
தமது காணிகளில் பிறர் சட்ட விரோதமாக குடியிருக்கும் நிலையில் செய்வதறியாத இவர்கள் பொலிஸ், பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களிடம் முறைப்பாடு செய்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று தெரிய வருகிறது.
குறிப்பிட்ட காணிகளில் குடியேறியுள்ள மாவீரர் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்பட்ட போதிலும் புலிகளினால் தமக்கு வழங்கப்பட்ட காணிகளையே அவர்கள் கேட்பதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கரைச்சி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் “கற்றுணர்ந்த பாடங்கள்” மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் அண்மையில் சாட்சிய மளித்த மாவீரர் குடும்ப உறுப்பினர்கள், புலிகளினால் தமக்கு வழங்கப்பட்ட காணிகளை தாம் அபிவிருத்தி செய்துள்ளதாகவும் அவற்றை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டுமானால் உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவீரர் குடும்பங்களுக்கு புலிகள் காணிகளை வழங்க முன்னர் அக்குடும் பங்களுக்கு சொந்தமாக காணிகள் இருந் ததாகவும் அவை பிரதான ஏ-9 பாதைக்கு உள்ளே தூரமாக இருப்பதால் அவர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை என்றும் வவுனியா மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக