அத்துடன் தமது இந்தப் புள்ளிவிபரத்தை விடவும் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இலங்கையில் தற்கொலைக்கு முயற்சிப்போரின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 10 இலட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். பல இலட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றுக்கு 4380 பேர் வரையில் தற்கொலை செய்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். 2008 ஆம் ஆண்டு இலங்கையில் 8 வயது முதல் 71 வயது வரையிலான 4120 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இங்கு தற்கொலை செய்வோரில் அதிகளவிலானோர் ஆண்களாகவும் 21 வயதுக்கும் 25 வயதுக்குமிடைப்பட்டவர்களாகவுமே உள்ளனர். பெண்கள் தற்கொலை செய்யும் எண்ணிக்கை குறைவாகவுள்ள போதிலும் அவர்களின் தற்கொலை முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகமாகவேயுள்ளன.
இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதொன்றும் கடினமான காரியமல்ல. அதிகமான தற்கொலைகள் காதல் தோல்வி, வேலையின்மை, நாட்டின் பொருளாதார சுமையை எதிர்கொள்ள முடியாத விரக்தி நிலை போன்றவற்றினாலேயே இடம்பெறுகின்றன. தற்கொலையை நாடுபவரின் முக்கிய நோக்கம் குறிப்பிட்ட பிரச்சினையிலிருந்து தன்னை ஒரேயடியாக விடுவித்துக்கொள்வதாகவேயுள்ளது.
தற்கொலை செய்வதற்கு யோசிக்கும் விநாடிகளில் வாழ யோசித்தால் எத்தனையோ வழிகள் கிடைக்குமென்பதைத் தற்கொலை செய்வோர் யோசிப்பதில்லை. தன்னை மட்டுமே பார்க்கின்றனர். தான் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் தனது குடும்பம், உறவுகள், நட்புகள் எல்லாம் எதிர்நோக்கும் கஷ்டங்கள், வேதனைகள் தொடர்பில் சிந்திப்பதில்லை.
தற்கொலைக்கான தூண்டுதலாக மன அழுத்தமேயுள்ளது. குடும்பப் பிரச்சினை, மதுபோதை, பரீட்சையில் தோல்வி, காதல், கள்ளக்காதல், பாலியல் குறைபாடுகள், தீராத நோய், தொழில்நஷ்டம் போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகின்றன. தற்கொலை கோழைகளின் செயல் என்கின்றனர். ஆனால், தற்கொலை செய்துகொள்ள அசாத்தியமான துணிச்சல் வேண்டும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இந்த அசாத்தியமான துணிச்சலை, அந்தப் பிரச்சினையைத் தீர்க்கப்பயன்படுத்தினால் விலை மதிக்க முடியாத எத்தனையோ உயிர்கள் வீணாகிப் போகமாட்டாது.
நாம் இறந்துவிட்டால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமென நினைப்பது தற்கொலை முடிவை எடுப்பதை விடவும் முட்டாள்தனமான முடிவு என்பதைத் தற்கொலை செய்வோர் ஒருகணமேனும் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ‘ஸ்ரீ லங்கா சுமித்திரயோ’அமைப்பு இன, மத, மொழி சார்பற்ற ஒரு அமைப்பாகவுள்ளதுடன் தற்கொலைகளைத் தடுப்பதற்கான பல்வேறு விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டு வருகின்றது.
இலங்கையில் தற்கொலையானது தற்கொலை புரிபவர்களை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர், உறவினர்களையும் பாதிப்பதாலும் தற்கொலை ஒரு சட்டவிரோத செயலென நினைப்பதாலும் பொலிஸ் விசாரணைகள் சமூகத்தில் அவமானத்தை ஏற்படுத்துமெனக் கருதுவதாலும் பல குடும்பங்கள் தற்கொலை மரணங்களை மூடி மறைத்துவிடுவதால் தற்கொலை தொடர்பிலான சரியான தகவல்களைப் பெற முடியாதுள்ளதாகக் கூறும் இந்த அமைப்பு, அதனால் இது தொடர்பில் நாடு முழுவதற்குமான பாரிய விழிப்புணர்ச்சி நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்துகின்றது.
இலங்கையில் தற்கொலைகளையும் அதிகரித்துச் செல்லும் தற்கொலை முயற்சிகளையும் தடுப்பதில் காத்திரமான பங்களிப்பு ஊடகங்களிடமேயுள்ளது. தற்கொலை, தற்கொலை முயற்சிகள் தொடர்பிலான செய்திகள், படங்கள், தகவல்களை வெளியிடுவதில் ஊடகங்கள் சுய தணிக்கையுடன் செயற்பட வேண்டும்.
அத்துடன் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் தமது வியாபார நோக்கை கைவிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பிரசாரங்களிலும் தமது பங்களிப்பை நல்கவேண்டும். தற்கொலை எண்ணத்தை மாற்றுவது அந்த முடிவை எடுத்தவரிடமேயுள்ளபோதும் அந்த எண்ணத்தை மாற்றும் முயற்சியிலாவது நாம் இறங்கலாமல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக