வியாழன், 30 செப்டம்பர், 2010

Colombo. அணு சக்தி உலை நிர்மாண ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்: ரஷ்யாவுடன் அரசு பேச்சுவார்த்தை


 அணுசக்தி உலை நிர்மாண ஆய்வு நடவடிக்கை ஆரம்பம் ரஷ்யாவுடன் அரசு பேச்சுவார்த்தை அணுசக்தி உலையை நிர்மாணிப்பதற்கான ஆய்வை இலங்கை ஆரம்பித்திருக்கிறது
அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை எதிர்கொள்வதற்காக அணுசக்தி உலையை நிர்மாணிப்பது   தொடர்பான    பேச்சுவார்த்தையை ரஷ்யா மற்றும் பல நாடுகளுடன்   இலங்கை ஆரம்பித்திருப்பதாக  மின்சக்தி வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் வேறு பல நாடுகளிடமிருந்து இந்த விடயம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரணவக்க கூறியுள்ளார்.
2025 காலப்பகுதிக்கான எமது நீண்டகால சக்திப் பிறப்பாக்கல் நோக்கத்தின் அடிப்படையில் அணுமின்சக்தியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக நாம் பரிசீலனை மேற்கொண்டுள்ளோம். எமது சக்தி பிறப்பாக்கல் தேவைகளின் வளங்களை பல்வேறுபட்டவையாக உருவாக்கிக்  கொள்ளுவதே எமது நோக்கமாகும். ஏனைய வளங்கள் மூலம் சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியாதவிடத்து நாம் அணுசக்தியைப் பயன்படுத்துவோம்’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.
30 வருட யுத்தம் முடிவடைந்ததையடுத்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
மின்சாரவெட்டுக்கான ஆபத்து தற்போதைய தருணத்தில் இல்லை. ஆனால், 2020 க்குப் பின்னர் மின்சாரவெட்டு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக எம்மை நாம் தயார்ப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.  அணுசக்தி உலையை நிர்மாணிக்க சுமார் 15 வருடங்கள் செல்லும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பூர்வாங்க ஆய்வை மேற்கொள்வதற்கு சுமார் 6 மாதங்கள் எடுக்கும்.
எந்த நாட்டிடமிருந்து இலங்கை உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் அணுவுலையை எங்கே நிர்மாணிப்பது என்பது குறித்தும் தீர்மானிப்பதற்கான பூர்வாங்க ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.  அணுசக்தியுலைகளுக்குத் தேவையான எரிபொருட்களை வழங்க ரஷ்யா தயாராகவுள்ளது. அத்துடன், கதிர்வீச்சு கழிவு சாம்பலை அகற்றுவது தொடர்பாக அதனைத் திரும்ப எடுத்துக்கொள்வதற்கும் ரஷ்யா தயாராகவுள்ளது. அதனால் ரஷ்யாவுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் ரணவக்க கூறியுள்ளார்.
பங்களாதேஷில் அணுசக்தியுலையை ரஷ்யா நிர்மாணித்து வருகிறது. இதேவேளை, சர்வதேச அணுசக்தி அதிகாரசபை மற்றும் அணு கைத்தொழில்துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது.   பயிற்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கற்றுக்கொள்வதற்காக இந்த நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருக்கிறது.
மரபுரீதியான வளங்களான நிலக்கரி மற்றும் மரபுரீதியற்ற மீளப்புதிப்பிக்கக்கூடிய வளங்களான நீர்,சூரியசக்தி,காற்று என்பனவற்றிலும் பார்க்க அணுமின்சக்தியானது அதிகளவு செலவுகூடிய விடயமென்று அமைச்சர் ரணவக்க தெரிவித்துள்ளார். பெற்றோலியம் மற்றும் நிலக்கரி, எரிபொருட்கள் முடிவடைந்து வருகின்றன. அதேசமயம், சூரியசக்தி,காற்று என்பனவற்றின் மூலம் சேகரிக்கப்படும் சக்தி வளங்களை சேமித்து வைப்பதற்கான செலவு மிகவும் அதிகமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இரவு வேளையில் மின்சாரத்துக்கான எமது தேவைகள் மிகவும் உச்சமட்டத்தில் இருக்கின்றது. அச்சமயத்தில் சூரியசக்தி மற்றும் காற்றினால் மின்சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: