செவ்வாய், 28 செப்டம்பர், 2010

காமன்வெல்த் போட்டி... வீரர்களைக் கடத்த லஷ்கர் இ தொய்பா திட்டம்?

டெல்லி: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு வீரர்களைக் கடத்தவும், தாக்குதல் நடத்தவும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனால் டெல்லியில் நடக்கும் இந்தப் போட்டிக்கு வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் வருகிற 3-ந்தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது. 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.

போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஸ்டேடியம் கட்டுமான பணிகளில் தாமதம், ஸ்டேடியம் கூரை இடிந்தது, வீரர்கள் தங்கும் விளையாட்டு கிராமம் சுத்தம் இல்லாமல் இருந்தது, பாம்புகளின் படையெடுப்பு என பல குறைபாடுகள் காரணமாக போட்டி ஏற்பாட்டாளர்கள் பெரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் திட்டமிட்டப்படி போட்டி நடக்குமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இருந்தாலும், கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையால் ஸ்டேடியங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி வரத்தொடங்கிவிட்டனர். நேற்று ஒரே நாளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 1100 வீரர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர்.

திட்டமிட்டப்படி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. போட்டி நடக்கும் ஸ்டேடியங்களில் வெளிநாட்டு வீரர்களை குறி வைத்து பாகிஸ்தானின் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தற்கொலை தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து [^], ஆஸ்திரேலியா [^] நாட்டு உளவு அமைப்புகளும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அல்கொய்தா, லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் [^] கைவரிசை காட்ட திட்டமிட்டுள்ளதாக எச்சரித்தன. இது தொடர்பான தகவல்களை இந்தியாவுக்கு கொடுத்து உஷார்படுத்தின.

4 அடுக்கு பாதுகாப்பு:

இதையடுத்து மத்திய அரசு டெல்லி நகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டேடியத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கடந்த வாரமே ஸ்டேடியங்கள் அனைத்தும் பாதுகாப்புப் படை வசம் ஒப்படைக்கப்பட்டது.

வீரர்கள் தங்குவதற்காக காமன்வெல்த் கிராமத்தில் 1168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த விளையாட்டு கிராமத்திலும் 4 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி ஜூம்மா மசூதியில் தைவான் நாட்டு பயணிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அடுத்தக் கட்டமாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது தாக்குதல் நடத்தப்போவதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனை லண்டன் பத்திரிகை ஒன்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த செய்தியில், இங்கிலாந்து வீரர்களை குறி வைத்து அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும். தாக்குதல் நடத்த முடியாத பட்சத்தில் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை தீவிரவாதிகள் கடத்த முயற்சி செய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியால் அச்சமடைந்துள்ள இங்கிலாந்து தனது வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப தயங்கி வருகிறது. இதனால் காமன்வெல்த் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேலும் அதிகரித்துள்ளது.

கார்கள் நிறுத்தத் தடை:

பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டு கார்கள் மூலம் ஸ்டேடியங்கள் மீது மோத செய்து நாசவேலைக்கு முயற்சி செய்யலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை தவிர்க்க ஸ்டேடியங்கள் அருகில் கார்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேடியங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு தவிர வெளிநாட்டு வீரர்கள் செல்லும் பகுதிகள் முழுவதற்கும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று டெல்லியில் ஆய்வு செய்தது.

ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு:

போட்டி தொடக்க விழா, நிறைவு விழா நடக்கும் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு பற்றி கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றபோதிலும், அதற்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்புப் படை வீரர்களை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவை தவிர டெல்லி விமான நிலையம் [^], தூதரகங்கள், பாராளுமன்றம், மெட்ரோ ரெயில் நிலையங்கள், மார்க்கெட்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1 கருத்து:

TechShankar சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.