வெள்ளி, 1 அக்டோபர், 2010

மீள்பரிசீலனை செய்ய முடியும்’ -மகிந்த ராஜபக்ஷ

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை தொடர்பில், தன்னிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது குறித்து மீள் பரிசீலனை செய்ய முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் பௌத்த பிக்குகளுடனான சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இராணுவ நீதிமன்றத்தின் மூலம் எவரையும் பழிவாங்கும் எண்ணம் எதுவும் தமக்கில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
இதற்கு முன்னரும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய குற்றச்சாட்டுக்காக சுமார் 8 ஆயிரம் பேர்வரையில் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்,   அதனால் இராணுவ நீதிமன்றம்  ஒன்றும்  புதுமையான  விடயம் அல்லவெனவும் அவர் பதிலளித்தார்.
தன்னால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை நாட்டின் அரசபடைகளின் தலைவர் என்ற ரீதியில் தான் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி கூறினார்.    ஆனால், அரசியலமைப்பின் விதிகளின்படி, ஜனாதிபதி என்ற ரீதியில் இந்த தண்டனை குறித்து மீள்பரிசீலனை செய்யும் அதிகாரம் தமக்குள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, ஆனால் அதற்கான கோரிக்கை முறைப்படி முன்வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகாவை பார்வையிட்ட அவரது மனைவி அனோமா பொன்சேகா, தாம் எவ்வித குற்றமும் செய்யாத நிலையில் எதற்காக மன்னிப்புக் கோரவேண்டும் என்று பிபிசியிடம் அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளர்.

கருத்துகள் இல்லை: