கொஞ்சம் மழை... கொஞ்சம் வெயில்... - கேட்க கவிதை மாதிரி தெரிகிறதல்லவா? ஆனால் இது ஒரு படத்தின் தலைப்பு.
படத்தை இயக்குபவரோ ஒரு கவிஞர். பெயர் ஏதாதேசி. சில படங்களில் ஏற்கெனவே பாடல்கள் எழுதியவர், இப்போது நேரடியாக பட இயக்கத்தில் இறங்கிவிட்டார்.
"காதலை மழையாகவும், அந்த காதலுக்கு வரும் எதிர்ப்பை வெயிலாகவும் சொல்லியிருக்கிறேன்" என்று படத்தின் தலைப்புக்கு விளக்கம் தருகிறார் ஏகாதேசி.
"எல்லார் வாழ்க்கையில் நடந்த காதலாகவும் இருக்கும். யார் வாழ்க்கையிலும் நடக்கக் கூடாத காதலாகவும் இருக்கும். இதுதான் என் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை. ஒரு நெருப்புத் துண்டும் அடர்ந்த மலையும் காதலித்ததால்தான் பூமி தோன்றியது. காதலர்களின் கால் தடங்களால் பூமி நிறைந்திருப்பதால்தான் வண்ண வண்ணமாய் பூ பூக்கிறது. பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் குடும்ப பாரத்தை சுமந்து திரியும் எத்தனையோ மனிதர்களையும் வீட்டின் கூரையை கடந்தும், வெட்டப்பட்டும் போன எத்தனை மரங்களையும், எல்லா நூற்றாண்டிலும் ஒரே ஒரு நிலாவையும் காதலுக்கு சாட்சியாக்கியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த படத்தில் கம்மங்காட்டு பொம்மையை காதலுக்கு சாட்சியாக்கிறோம் என்ற ஏகாதேசி பேசும்போது ஒவ்வொரு வார்த்தைகளும் மெட்டுக்கு தயாராவதை போல உருவாகிறது... இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் ஓகே சொல்லிவிட்டார் என் தயாரிப்பாளர்", என்கிறார் ஏகாதேசி.
தேஜ், நட்சத்திரா என்ற புதுமுக காதல் ஜோடியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். நட்சத்திரா மலையாளப் பொண்ணு. ப்ளஸ் டூ முடித்துவிட்டு டிகிரி பண்ணுகிறாராம். இதுதான் முதல் படமாம்.
இதற்கு முன் வீர சேகரன் என்ற படத்தை தயாரித்தவர்தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரன். சிங்கப்பூர் பார்ட்டி. முதல் படம் சற்று காலை வாரிவிட்டது உண்மைதான் என்றும், அதிலிருந்து கற்ற பாடத்தை வைத்து, இப்போது தெளிவாக களமிறங்கியிருப்பதாகவும் கூறினார்.
"இந்த படத்தை முழுவதுமாக திட்டமிட்டபடி முடிச்சிட்டோம். போட்டுப் பார்த்ததில் ஏக திருப்தி. நிச்சயம் எனக்கு பேர் வாங்கி தர்ற படமா இருக்கும்னு நம்புறேன்" என்றார் தயாரிப்பாளர் சந்திரசேகரன். படத்துக்கு ஒளிப்பதிவு சுகுமார். பிஆர்ஓ கோவிந்தராஜ்.
பரணி இசை அமைத்துள்ளார். மூன்று பாடல்களைப் போட்டுக் காட்டினார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும். உண்மையிலேயே அருமையாக வந்திருந்தன. குறிப்பாக 'யாரடிச்சி அழுதது உன் வாழ்க்கை' என்ற பாட்டு உருக்கிவிட்டது.
பாடல்களும், காட்சி அமைப்பும் தமிழின் குறிப்பிடத்தக்க படமாக 'கொஞ்சம் மழை கொஞ்சம் வெயில்' அமையும் என்பதை அழுத்தமாக உணர்த்தின!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக