செவ்வாய், 28 செப்டம்பர், 2010

மீளக்குடியேறிய, இடைத்தங்கல் முகாம் மக்கள் பிரதிநிதிகளுடன் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் பேசுவதற்குத் திட்டம்

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த கூட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியின் தலைமையில் அவரது அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
மீள்குடியேற்றப்பட்ட மற்றும்  இடைதங்கல் முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து அம்மக்களின் பிரதிநிதிகளுடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.
 அன்றைய தினம் இக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் முடிந்தவுடன் அவர்கள் மீள்குடியேற்ற மக்களினதும் இடைத்தங்கல் முகாம் மக்களின் பிரதிநிதிகளுடனும் அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவர் என சிவாஜிலிங்கம் கூறினார். இதற்காக இம்மக்களின் பிரதிநிதிகள் கொழும்புக்கு வரவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 தமிழ்க்கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் அரங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இவ்வரங்கத்தில் பங்குபற்றுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து கேட்டபோது, இதுவரை தமிழ்தேசியக் கூட்டமைப்பினரிடமிருந்து உத்தியோகபூர்வ பதில் வரவில்லையென்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: